

நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இன்று (8-ம் தேதி) ஏராளமான கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 8-ம் தேதி (இன்று) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவையிலும் இன்று கடைகள் அடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவை நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரியகடை வீதி, வின்சென்ட் சாலை, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, செல்வபுரம், ராஜவீதி, என்.எச்.சாலை, ஆவாரம்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, போத்தனூர், செல்வபுரம், ரத்தினபுரி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் 60 சதவீதக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
முக்கிய வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. அவற்றின் முன்பு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அதேபோல், இடதுசாரிக் கட்சி சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ, வேன், டாக்ஸி போன்ற வாகனங்கள் காலை முதல் மாலை வரை ஓடவில்லை. அதேசமயம், பேருந்துப் போக்குவரத்து எவ்வித இடையூறும் இன்றி இயங்கியது.
பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் 1,200 போலீஸாரும், மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் முக்கிய இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கடைகளை மூட வற்புறுத்திச் சிலரை, மாவட்டக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம், மறியல்
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது. மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இதற்குத் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை அன்னூர் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கிழக்கு மண்டலக் குழுக்கள் சார்பில், பீளமேட்டை அடுத்த ஹோப் காலேஜ் பாலரங்கநாதபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாண்டியன் தலைமை தாங்கினார். பின்னர், கோரிக்கைகளை வலியறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். மாவட்டத் தலைவர் ராஜா உசேன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் இன்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முற்றுகையில் ஈடுபட்டோர் ரயில் நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகை, மறியலில் ஈடுபட்ட 250 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
மதிமுக சார்பில், விகேகே மேனன் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் பவர் ஹவுஸ் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.