

கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த மறியலில் 176 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று (டிச.8) அனைத்துக் கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன. போக்குவரத்து எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டது.
கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுய ஆட்சி இந்தியா கிறிஸ்டினா, வேலுசாமி, சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை கரூர் நகரக் காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்டத்தில் தோகைமலையில் 38, குளித்தலையில் 25, மாயனூர் 13 என 4 இடங்களில் நடந்த மறியலில் 176 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மருந்து வணிகர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.