வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி ஆதரவு.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி ஆதரவு.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். ‌

விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் இன்று (டிச.8) புதுச்சேரியில் நடைபெற்றது.

சுப்பையா சாலையிலிருந்து 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து புதிய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டத்தையொட்டி புதிய பேருந்து நிலைய வாசலில் சாலை மறியல் நடைபெற்றது.

அப்போது, மறைமலை அடிகள் சாலை வழியாக முதல்வர் நாராயணசாமி காரில் வந்தார். மறியலைக் கண்ட அவர் காரைவிட்டு இறங்கி மறியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, 3 வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றன. டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பிலும், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் மறியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டேன். புதுவையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும்" என்று தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கூட்டணிக் கட்சியான திமுக, பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. ஆனால், இப்போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in