Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கரோனா தடுப்பு மருந்து ‘கோவேக்சின்’ 3-ம் கட்ட ஆராய்ச்சி: இணைவேந்தர் பி.சத்தியநாராயணன் தொடங்கி வைத்தார்

கரோனா வைரஸ் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு ஊசிகள் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்தியாவில் ஐதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கரோனா தடுப்புக்காக ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்தை உருவாக்குவதில் இறுதிநிலையை எட்டியுள்ளது. அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்திபரிசோதனை செய்வதற்கான பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (SRM MCHRC) இந்த ஆராய்ச்சி பணிகள் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. அதன்படி இம்மையத்தில் முதற்கட்டமாக 30 தன்னார்வர்களுக்கும், 2-ம் கட்டமாக 150-க்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் அது வெற்றிகரமாக அமைந்தது.தற்போது 3-ம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கப்பட்டது.

இதை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர்(கல்வி) டாக்டர் பி.சத்தியநாராயணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இணை துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார், டீன் டாக்டர் ஏ.சுந்தரம், கண்காணிப்பாளர் டாக்டர்கே.தங்கராஜ், துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.பாலமுருகன், இயக்குநர்(தொடர்பு) ஆர்.நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

3-ம் கட்ட பரிசோதனை தொடர்பாக கோவேக்சின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் சத்யஜித் மஹோபத்ரா மற்றும் டாக்டர் மெல்வின் ஜார்ஜ் ஆகியோர் கூறும்போது, “இப்போது 1000 முதல் 1500 தன்னார்வர்களுக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுவரை மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை. இருப்பினும் மருந்தின் தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x