Published : 07 Dec 2020 04:49 PM
Last Updated : 07 Dec 2020 04:49 PM

பரப்பன அக்ரஹாரம், திஹார் சிறையை நிரப்பியவர்கள் என்னை பி டீம் என்பதா?- கமல் காட்டம்

காந்தியின் பி டீம் நான். என்னை சங்கி, பி டீம் என்று சொல்பவர்கள் ஊழல் புத்திரர்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியதிலிருந்து அவரை பாஜகவின் பி டீம், வாக்குகளைப் பிரிப்பதற்காக இயங்குகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. தான் ஒரு பகுத்தறிவுவாதி, ஊழலை எதிர்க்கும் காந்தியவாதி என கமல் தன்னைப் பற்றி மேடையில் சொல்வார். இந்நிலையில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தவிர, தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரவேற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிஷன் விவகாரத்தில் கமல்ஹாசன் திடீரென ஆவேசப்பட்டு பேட்டி அளித்தார்.

அதில் சூரப்பா மீது புகார் அளித்த நபர்களைத் தரக்குறைவாகவும், ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர் லஞ்சம் வாங்கினார் என பாலகுருசாமி பேட்டி அளித்தார் என்றும், தினந்தோறும் துறைதோறும் ஊழல் பற்றி புகார் வந்ததே விசாரித்தீர்களா என்றும் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த நிலைப்பாடு குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் அதற்கு பதிலளித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்கத் தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x