Last Updated : 07 Dec, 2020 04:27 PM

 

Published : 07 Dec 2020 04:27 PM
Last Updated : 07 Dec 2020 04:27 PM

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி- ஆட்சியர்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவின்போது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

திருநள்ளாறில் சனி பகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவின்போது நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் வளாகத்தில் இன்று (டிச.7) நடைபெற்றது. இதில் துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம், நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:

’’கூட்டத்தில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2 வாரங்களுக்குள் ஏற்பாடுகள் முழுமையடையும். கரோனா பரவல் தடுப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சனிப்பெயர்ச்சி நாளன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, உரிய அடையாள அட்டையுடன் வரும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதனால் தர்ம தரிசனம், கட்டண தரிசனம் ஆகிய்வற்றுக்கு, உள்ளூர் மக்கள் உள்ளிட்ட பக்தர்கள் எவர் ஒருவரும் ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யாத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சனிப்பெயர்ச்சி விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக ஆன்லைன் பதிவு தொடங்கும். சனிப்பெயர்ச்சிக்கு முந்தைய ஒரு வாரத்துக்கும், பிந்தைய 4 வாரங்களுக்கும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) இதே நடை முறை இருக்கும்.

கோயில் வளாகத்துக்குள் செல்லும் அனைவரின் உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்கக் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்யுமாறு சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாருக்கேனும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற வகையிலான மருத்துவ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ உதவிக்காக செஞ்சிலுவை சங்க ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும். கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பக்தர்களின் வரிசையை முறைப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட, அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படும். மற்றபடி வழக்கமாக சனிப்பெயர்ச்சி விழாவுக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த முறை உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

நளன் குளத்தில் நீராட பக்தர்களை அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்து, ரயில் போக்குவரத்து தொடர்பாக வழக்கமான முறையில் ஏற்பாடு செய்யப்படும். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும். உரிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பக்தர்கள் www.thirunallarutemple.org/sanipayarchi என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும்’’.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x