Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

பேருந்து பயணத்தின்போது ‘ரூட் தல’ மாணவர்கள் அத்துமீறினால் நடவடிக்கை: காவல் இணை ஆணையர் எச்சரிக்கை

பேருந்தில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ‘ரூட் தல’ என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடசென்னை காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் கீழ்ப்பாக்கம், நந்தனம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கலைக் கல்லூரிகளின் மாணவர்கள் இடையிலும், அவர்களுக்கு தலைவனாக செயல்படும் ‘ரூட் தல’ மாணவர்கள் இடையேயும் பேருந்து பயணத்தின்போது அடிக்கடி மோதல் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கீழ்ப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதையடுத்து ‘ரூட் தல’ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கபோலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, 17 வழித்தடங்களில் சுமார் 100 ‘ரூட் தல’ மாணவர்கள் ரகளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் அழைத்து போலீஸார் எச்சரித்தனர். மீண்டும் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பல மாணவர்கள் மீது கல்லூரி தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தகராறில் ஈடுபடும் மாணவர்களை அழைத்து ‘இனி தவறு செய்ய மாட்டோம்’ என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. இதன்மூலம் ஓராண்டு காலத்துக்குள் உறுதிமொழியை மீறுபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டதால், மாணவர்கள் இடையிலான மோதல் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதால், பேருந்துகளில் கொண்டாட்டம் என்ற பெயரில் ரகளையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், ரூட்தல என்றபெயரில் ரகளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட சென்னை காவல்இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறும்போது, ‘‘பேருந்து வழித்தடங்களில் ‘ரூட் தல’ என்ற பெயரில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, பேருந்து கூரையில் பயணம் செய்வது, படிகளில் தொங்கி சாகசம் செய்வது போன்ற அராஜக செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மற்றும் மாணவர் போர்வையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x