Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு: ரூ.3,758 கோடி நிவாரணம் கோரியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

‘நிவர்’ புயல் பாதிப்புகளை பார்வையிடுவற்காக மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களிடம் ரூ.3,758 கோடி நிவாரணம் கோரியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி ‘நிவர்’ புயல் கரையைக் கடந்தது. பலத்த காற்று மற்றும் கனமழையால் விவசாய நிலங்கள், சாலைகள், மின்கம்பங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தன. புயல் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் உயிரிழந்தவர்கள், வீடுகள் இழப்பு, கால்நடைகள் இழப்புக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய அரசு உறுதியளித்தபடி, தமிழக புயல் சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் நேற்று மாலை, தமிழக தலைமைச் செயலர் சண்முகம், வருவாய்த் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.

இன்று அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து, ஆய்வு மேற்கொள்கின்றனர். ஒரு குழுவினர் இன்று காலை சென்னை வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை சதுப்புநிலம், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட பிறகு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் புதுச்சேரி புறப்பட்டு செல்கின்றனர்.

மற்றொரு குழுவினர், வடசென்னை பகுதியில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இணையும் அழகப்பா சாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் சென்று, அங்கு 4 இடங்களில் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். பின்னர் வேலூர் புறப்பட்டுச் செல்கின்றனர்.

முதல்வருடன் சந்திப்பு

முதல் குழுவினர் நாளை காலை புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு கடலூர், விழுப்புரத்தில் ஆய்வு செய்கின்றனர். 2-வதுகுழுவினர் வேலூர், திருப்பத்தூரில் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். இரவு 2 குழுக்களும் சென்னை திரும்புகின்றன. 8-ம் தேதி காலை முதல்வர் பழனிசாமியை சந்தித்த பிறகு, டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், புயல், மழை நிலவரம் தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் தற்போது வரை 385.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பு அளவான 377.1 மி.மீ.விட 2 சதவீதம் அதிகம். இதில், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 19 மாவட்டங்களில் இயல்பான அளவும், மற்ற 8 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய தற்போது மத்திய குழுவினர் வந்துள்ளனர். அவர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம்நடைபெற்றது. அப்போது, பயிர்ச்சேதம், உயிர்ச் சேதம், அனைத்து துறைகளுக்கும் வழங்கியது,மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டது என அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு தற்காலிக சீரமைப்புக்காக ரூ.650 கோடி, மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக ரூ.3,108 கோடி என ரூ.3,758 கோடி கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x