Published : 04 Dec 2020 03:09 PM
Last Updated : 04 Dec 2020 03:09 PM

தடுப்பூசிக்கான செலவைக் கண்டு அரசு மலைத்துப் போகக்கூடாது; மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடாகக் கருத வேண்டும்: பிரதமர் முன்  டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை

தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்துப் போகக் கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு என்றுதான் கருத வேண்டும். ஜிஎஸ்டி வரி வருவாய் இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அரசு ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு வேண்டுகோள் வைத்தார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட தகவல் குறிப்பு:

“கோவிட்-19 என அழைக்கப்படும் கரோனா தொற்று நோய் தடுப்பூசி தயாராகி வரும் நிலையில் நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசி போடுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (04-12-2020) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் திமுக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

கரோனா பெருந்தொற்று தொடர்பாக இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதற்கும் அதில் திமுக பங்கேற்றிட அழைத்து வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு, இந்தியாவில் கரோனா தொற்றுக்கு நிவாரண தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு கண்காணித்து மருந்து தயாராகி வரும் நிறுவனங்களுக்கு அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டு பிரதமர் மோடி ஊக்குவித்ததையும் பாராட்டினார்''.

இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு ஆற்றிய உரை:

''கரோனா தொற்று பாதிப்பில் உலகளாவிய நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏறத்தாழ 95 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று வரை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இன்னுயிர் இழந்துள்ளனர். ஆனால், ஓராண்டுக்கு முன்னால் இந்தப் பெருந்தொற்று உருவான சீனாவில் நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93,096 மட்டுமே. அதைப் போல இறந்தோரின் எண்ணிக்கை 4,744 என மிக மிகக் குறைவாக உள்ளது.

தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான விலை அதிகமாக உள்ளதுடன் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, பரிசோதனை எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, பரிசோதனைச் செலவை மிகவும் குறைப்பதுடன் மாநிலங்களுக்கு நிதி உதவியும் அளியுங்கள்.

தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பலகட்ட சோதனைகளைக் கடந்து பயன்பாட்டுக்கு விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், நாம் எவ்வித தாமதத்துக்கும் இடம் தராமல், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டும், அதற்கான ஆயத்தங்கள் திட்டமிடப்பட வேண்டும்.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் 161 தடுப்பூசி வகைகள் தயாரிப்பு வெவ்வேறு நிலைகளில் உள்ளன. 55 தடுப்பூசி வகைகள் மனிதர்கள் மேல் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் இரண்டு தடுப்பூசி மருந்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை.

புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் ஏ.இ.ஜட்.டி.1222, மற்றும் ஹைதராபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், தேசியத் தொற்றியல் நிறுவனம் ஆகிய இரு மத்திய அரசின் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி வரும் கோவாக்ஸின் எனப் பெயர் கொண்ட தடுப்பூசிகள் இவை. மத்திய அரசும் பிரதமரும் இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பாராட்டுக்குரியவர்கள்.

இதற்கிடையில் புகழ்பெற்ற சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் உருவாக்கி உள்ள கரோனா தொற்று தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டின் பிரதமர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், இந்தத் தடுப்பூசி விலை 37 முதல் 39 அமெரிக்க டாலர்கள் அளவில் விலை மிகுந்து இருப்பதுடன், இந்த மருந்து மைனஸ் எழுபது டிகிரி செல்சியஸ் குளிர் சேமிப்பில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால், புனே சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கி உள்ள கரோனா தொற்று தடுப்பூசி அரசுக்கு மூன்று டாலர் விலைக்கும், தனியார் நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இம்மருந்து இரண்டு முதல் எட்டு டிகிரி அளவில் சேமித்து வைக்கப்பட முடியும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் சரியாக இருக்குமானால் இந்தியத் தயாரிப்பான இந்தத் தடுப்பூசி நமது நாட்டின் சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்.

1600 மில்லியன் ஊசிமருந்து அளவுக்கு மக்களுக்கு, அதுவும் ஒருவருக்கு ஒரு டோஸ் ஊசி தந்திட மத்திய அரசு உத்தேசித்து இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் இந்த அளவுக்கு உடனடியாக உற்பத்தி செய்து தர முடியுமா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில், கனடா, அந்நாட்டு மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 டோஸ் மருந்தும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகள் 5 டோஸ் மருந்தும், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா 5 டோஸ் அளவுக்கு ஊசிமருந்து தர திட்டமிட்டுள்ளன என்று தெரிகிறது.

எனவே, இந்தியாவிலும் குறைந்தபட்சம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போல 3 டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும். எனவே, இந்தியாவில் தயாராவது போக வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நமது மக்கள் தொகை 130 கோடி என்று கணக்கில் கொண்டு பார்த்தால் ஊசி விலை சராசரி ரூபாய் ஆயிரம் என்று வைத்து மதிப்பீடு செய்தாலும், மொத்த செலவு 3,90,000 கோடி வரை ஆகும். எனவே, இப்போதைக்கு ஆளுக்கு இரண்டு டோஸ் என எடுத்துக் கொண்டால் அரசுக்கு ஆகும் செலவு ரூபாய் 2,60,000 கோடி அளவில் இருக்கும்.

இந்தத் தொகையை மத்திய - மாநில அரசுகளுடன் இவற்றின் பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய நிறுவன சமுதாயப் பொறுப்பு நிதியை 2021-2022ஆம் ஆண்டுகளில் முற்றிலும் தடுப்பூசி மருந்துக்குப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்துப் போகக்கூடாது. இது, அரசு இந்திய மக்களாலான மனிதவளத்தின் மீது செய்யப்படும் முதலீடு என்றுதான் கருத வேண்டும். கரோனா காரணமாக கடும் வீழ்ச்சிக்கு ஆளான இந்தியப் பொருளாதாரம் மீளத் தொடங்கிவிட்டதைத் தெரிவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் இவ்வாண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. எனவே, அரசு தேவைப்பட்டால், ஏனைய தவிர்க்கக் கூடிய செலவினங்கள் அனைத்தையும் ஒத்திவைத்து, கரோனா தடுப்பூசி செலவுக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம்.

இன்று நாம் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய கடமை என்பது மாவட்ட, வட்டத் தலைநகர்களில் கரோனா தொற்று தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்லவும், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு வசதிகளைத் தயார் நிலையில் வைப்பதுதான்.

அத்துடன், தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் தொகையை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தி உரிய திட்டத்தை உடனடியாகத் தயாரித்தால்தான் 130 கோடி மக்களுக்கும் ஊசிமருந்து செலுத்தும் பெரும் சவாலைச் சந்திக்க முடியும்''.

இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x