Published : 02 Dec 2020 17:02 pm

Updated : 02 Dec 2020 17:02 pm

 

Published : 02 Dec 2020 05:02 PM
Last Updated : 02 Dec 2020 05:02 PM

சிமென்ட் துகள்கள் வெளியேற்றத்தால் பொதுமக்கள் அவதி; கோவை மதுக்கரை தனியார் சிமென்ட் ஆலைக்கு ரூ.45 லட்சம் அபராதம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு

fine-for-cement-factory
கோவை மதுக்கரையில் செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலையின் உட்புறப் பகுதி.

கோவை

சிமென்ட் துகள்கள் வெளியேற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதால், கோவை மதுக்கரை தனியார் சிமென்ட் ஆலைக்கு ரூ.45 லட்சம் அபராதம் விதித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கோவை மதுக்கரையில் செயல்பட்டுவரும் தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமென்ட் துகள்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி குரும்பபாளையம் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.


இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கோவை (தெற்கு) கோட்டாட்சியர் எஸ்.தனலிங்கம் தலைமையில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய், காவல்துறையினர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மதுக்கரை பேரூராட்சி அலுவலர்கள், ஏசிசி சிமென்ட் ஆலை நிர்வாகத்தினர், குரும்பபாளையம் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டல இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர், சிமென்ட் ஆலையில் புகை வெளியேறும் பகுதி, புகையால் பாதிக்கப்படும் பகுதிகளை நவம்பர் 6-ம் தேதி ஆய்வு செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைமையகத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

"குரும்பபாளையம் பகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் சிமென்ட் ஆலைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 18,19-ம் தேதிகளில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ததில், காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு (பி.எம்.10) அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, விளக்கம் கேட்டு ஆலை நிர்வாகத்துக்கு செப்டம்பர் 12-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. மாசு ஏற்படுத்துபவர்தான் அதற்கான இழப்பை வழங்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2017-ம் ஆண்டு ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ரூ.45 லட்சத்தை ஏசிசி ஆலை நிர்வாகம் அபராதமாகச் செலுத்த வேண்டும். மேலும், சிமென்ட் ஆலைகளில் பின்பற்ற வேண்டிய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து சிமென்ட் கிளிங்கர் எடுத்து வருவதை நிறுத்த வேண்டும். சிமென்ட் பேக்கிங் பிரிவில் நடைபெறும் பணிகளையும் நிறுத்த வேண்டும்.

காற்றின் தரத்தை ஆன்லைனில் கண்காணிக்கும் கருவியைக் கூடுதலாகப் பொருத்த வேண்டும். சுற்றுச்சூழல் மேலாண்மைக்கென தனிக் குழுவை உருவாக்கி அதற்கான ஆய்வகத்தையும் அமைக்க வேண்டும். இந்த உத்தரவுகளை ஒரு மாதத்துக்குள் பின்பற்றாவிட்டால் சிமென்ட் ஆலையை மூடவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து குரும்பபாளையம் பகுதி மக்கள் கூறும்போது, "மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு திருப்தி அளிக்கிறது. மீண்டும் சிமென்ட் துகள்களால் பிரச்சினை ஏற்பட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.

மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, "உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. உத்தரவை மீறினால் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

தவறவிடாதீர்!


சிமென்ட் துகள்கள்சிமென்ட் ஆலைமாசுக்கட்டுப்பாட்டு வாரியம்Cement particlesCement factoryPollution control boardONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x