Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

மழை தொடர்பான வலைதள வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்; இயற்கையை கையாள்வதிலும் எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி செய்வதா?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

புயல், மழை தொடர்பாக சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இயற்கையை கையாள்வதிலும் எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி செய்து வருவது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் புதிதாக புயல்சின்னம் உருவாகியுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ளமாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதிய புயல் காரணமாக தென் மாவட்டங்களில் டிச.4-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின்படி, மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அலுவலர்கள், பொதுமக்களுக்கு TNSMART செயலி, ட்விட்டர் மூலமாகவும் புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மீனவர்கள் தொலைதொடர்பு சாதனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்.

நவ.30-ம் தேதி நிலவரப்படி, தூத்துக்குடியில் இருந்து 491இயந்திரப் படகுகள், 35 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், கன்னியாகுமரியில் இருந்து 172 ஆழ்கடல்மீன்பிடி படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன. செயற்கைக் கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அனைத்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கும் புயல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்குமாறு கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்கள், லட்சத்தீவு யூனியன் பிரதேச மீன்வளத் துறைகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் குழுக்களும் அண்டைமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்கள் மீன்பிடிக்கக் கூடிய பகுதிகளின் புவியியல் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் கடற்படை, கடலோரக்காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

புயல், மழை தொடர்பான அறிவிப்புகளை அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. எனவே,மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

மாற்றுக் கருத்து, கொள்கை உடையவர்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோர் மழை தொடர்பாக தவறான வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இயற்கையை கையாள்வதில்கூட அரசியல் சூழ்ச்சியை எதிர்க்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் யாரும் இதுபோல அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x