Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நிவர் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நொச்சிக்குப்பம், சைதாப்பேட்டை ஆரோக்கிய மாதா நகர் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிவர் புயல் பாதிப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தன, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்து வருகின்றன. பாஜக மகளிர் அணி சார்பில் சுமார் 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி உள்ளோம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை தமிழக அரசியல் களத்தில் பாஜகவுக்கு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல் யாத்திரைக்கு திரளும் மக்கள் கூட்டமே அதை உறுதிப்படுத்துகிறது.

ஆசை காட்டி மதம் மாற்றும் உள்நோக்கத்துடன் ஏமாற்றி நடைபெறும் திருமணங்களை தடுக்கவே உத்தர பிரதேச பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற திருமணங்கள் நடப்பதாக கேரள உயர் நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி 1996-ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. 1996-ல் தனித்துப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. கடந்த 2016 தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் நான் 22 சதவீத வாக்குகள் பெற்றேன்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் முறை தொடரும் என்று அறிவித்த பிறகும்கூட, அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராடி வருகின்றன. விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக அரசு ஒருபோதும் செயல்படாது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x