Published : 06 Oct 2015 12:34 PM
Last Updated : 06 Oct 2015 12:34 PM

சென்னை மெட்ரோ ரயில் விபத்தில் பலியான கிரிதரன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கிண்டி மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணியில்போது கம்பி விழுந்து பலியான கிரிதரன் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு விபத்துகளில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்து முதல்வர் இன்று (செவ்வாய் கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், பெரம்பூர் பணிமனையில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்த பட்டாளம், எத்திராஜ் தோட்டத்தைச் சேர்ந்த அனந்தராமன் என்பவர் 20.5.2015 அன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; சென்னை, வடக்குக் கோட்டை சாலை, பழைய அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் அருகில் 3.6.2015 அன்று நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கண்ணபிரான் என்பவரின் மகன் அப்பு, தயாளன் என்பவரின் மனைவி சகுந்தலா மற்றும் சிங்காரம் என்பவரின் மனைவி சின்னபொண்ணு ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மைக்கேல்பட்டி கிராமம் அருகே 11.6.2015 அன்று ஆலமரத்திலிருந்த கதண்டு வண்டுகள் தாக்கியதில் கைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி சிவானந்தம் மற்றும் அந்தோணிசாமி என்பவரின் மகன் இருதயராஜ் ஆகியோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் கிரிதர் 17.6.2015 அன்று ஆலந்தூர் வட்டம், புனித தோமையர் மலை, சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் இடம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சென்னை, கே.கே. நகரைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சதீஷ் மற்றும் அன்பழகன் என்பவரின் மகன் அருண் ஆகிய இருவரும் 21.6.2015 அன்று ஆலந்தூர் வட்டம், ஜி.எஸ்.டி. சாலை, ஆசர்கானா சுரங்கப் பாதை அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் சென்று கொண்டிருந்த போது மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தூண் மீது நிலை தடுமாறி மோதியதில் பலத்த காயமடைந்து சதிஷ் சம்பவ இடத்திலேயும், அருண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், ஓகைப்பேரையூர் கிராமத்தில், அண்ணா காலனி – ஜீவா தெரு ஆகியவற்றை இணைக்கும் வெள்ளையாற்றின் குறுக்கே அமைந்துள்ள இரும்பு நடைப்பாலம் 17.6.2015 அன்று சரிந்து விழுந்ததில் ஐந்து நபர்கள் ஆற்றில் விழுந்து பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் ஓகைப்பேரையூர் கிராமத்தில் இரும்பு நடைப்பாலம் சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x