Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

தேசிய அளவில் செயல்பாடு, வளர்ச்சியில் 3-வது ஆண்டாக முதலிடம்; தமிழகத்துக்கு ‘சிறந்த மாநிலம்’ விருது: மக்கள் ஒத்துழைப்பே காரணம் என முதல்வர் பழனிசாமி பெருமிதம்

தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பும், தமிழக மக்களின் ஒத்துழைப்புமே இதற்கு காரணம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு செயல்பாடுகளை ‘இந்தியா டுடே’ நிறுவனம்ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து, ‘மாநிலங்களில் சிறந்த மாநிலம்’ என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த மாநில விருதுதமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. 2,000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகள்பெற்று ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இந்த விருதை தமிழக அரசு 2018, 2019-ம் ஆண்டுகளை தொடர்ந்து 2020-ம் ஆண்டிலும் பெறுகிறது.

வேலைவாய்ப்பு

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியது, வணிகச்சூழல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. மாநிலப் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம்ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல், சுகாதாரம் பேணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மாநிலம் தேர்வு செய்யப்படுகிறது.

தற்போது இதன் அடிப்படையில், பெரிய மாநிலங்களுக்கு இடையில் சிறந்த மாநிலமாக முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது.

நாட்டின் மக்கள்தொகையில் 6-ம் இடத்திலும், நாட்டின் பெரிய மாநிலங்களில் 12-வது இடத்திலும், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3-வது இடத்திலும் தமிழகம் உள்ளது. அதிக நகர்ப்புறங்கள் கொண்ட மாநிலமாகவும், தொழில்துறையில் வலுவான உற்பத்தி அடித்தளம், அதிக சேவைத் துறைகளை தன்னகத்தே கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது. அரசியல் தாக்கங்கள் இருந்த போதும்,தொழில் துறை வளர்ச்சிக்கு அரசுஅதிக முக்கியத்துவம் கொடுத்ததே, அதிக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் போன்ற முகமைகள் அமைக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகளும் மாநிலத்தின் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை எட்ட உதவியுள்ளது.

தமிழகத்தில் தொழில் கட்டமைப்பு அனுமதி, நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி பெறுதல்போன்றவற்றுக்கான அறிவுரைகளை மாநில அரசின் ஒருங்கிணைந்த முதலீட்டு முகமை வழங்குவதன் மூலம் மாநிலத்தில் தொழில் முயற்சிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

தொலைநோக்குப் பார்வை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் உருவாக்கப்பட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை- 2023’, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரியமுயற்சிகள் மற்றும் 13 பிரிவுகளில்நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் ஊக்குவிக்க காரணமாக அமைந்துள்ளது. தொலைநோக்குப் பார்வை இலக்குகளை, ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமியும் தொடர்ந்து முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

கடந்த 2019-20 ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம்தான். ஆனால்,தமிழகம் தேசிய சராசரியைவிட 2 மடங்கு உயர்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. சமூகநீதி,பின்தங்கிய மக்களை உயர்த்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு, பொதுக் கல்வி,சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேறி, உள்ளடக்கிய வளர்ச்சியை பெற்றதுடன்,படித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக திறமையான தொழிலாளர்களையும் கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சதவீதம் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவு. முதலிடம் பெற்றதற்கான விருது வரும் டிச.5-ம் தேதி தமிழக அரசுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகி சாதனை படைத்துள்ளது. இந்த விருதை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து, தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x