Published : 10 Oct 2015 03:55 PM
Last Updated : 10 Oct 2015 03:55 PM

ரூ.10-க்கு சக்கைப் பால் விற்ற விவகாரம்: தனியார் பால் பண்ணை மீது வழக்கு

கோவையில், தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக ரூ.10-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பாலை வாங்கிச் சென்று, பால் வியாபாரிகள் ரூ.40-க்கு விற்கும் விவகாரம் தொடர்பாக, தரமற்ற முறையில் பால் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை, வாகாராயன் பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை மூலமாக அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்பட்ட சக்கைப் பால் லிட்டர் ரூ.10-க்கு மாநகரில் பல்வேறு இடங்களில் வைத்து பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுவதாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ மூலமாக கிடைத்த தகவலை உறுதி செய்து செய்தி வெளியிடப்பட்டது.

கழிவாக கீழே செல்ல வேண்டிய பாலை வாங்கிச் சென்று, அதை சூடு செய்து ஆற வைத்து நல்ல பாலை அதனுடன் கலக்கி ரசாயனம் கலந்து விற்பது குறித்து செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சக்கைப் பால் விவகாரம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மட்டும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் தலைமையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தனியார் பால் பண்ணையில் அண்மையில் திடீர் ஆய்வு நடத்தினர்.

ஆய்வின்போது சக்கைப் பால் கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பால் பண்ணை நிர்வாகம் மீது உணவு பாதுகாப்புச் சட்டம் 51 பிரிவின் (தரமற்று இருத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அலுவலர் கதிரவன் கூறும்போது, ‘உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி கொழுப்பு நீக்கப்பட்ட சக்கைப் பாலை விற்கலாம். ஆனால், சக்கைப் பால் என்பதை வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தி விற்க வேண்டும். அதேபோல், சக்கைப் பாலில், கொழுப்பு உள்ள பாலைக் கலந்து கலப்படம் செய்து விற்றால்தான் தவறு. சம்பந்தப்பட்ட பால் பண்ணையில் நடத்திய ஆய்வில் சேகரிக்கப்பட்ட பாலை ஆய்வு நடத்தியதில் சக்கைப் பாலை அவர்கள் தனியாக வைத்திருந்தனர்.

கொழுப்பு உள்ள பாலை தனியாக வைத்திருந்தனர். ஆனால் சக்கைப் பாலில் எஸ்.என்.எஃப். என்ற அளவு 8.5 கிராம் இருக்க வேண்டும். ஆனால், 7.5 கிராம்தான் இருந்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு சட்டம் 51 பிரிவின் கீழ் தரமற்ற பாலை விற்றதாக வழக்கு பதிவு செய்துள்ளோம். இதன்படி, ரூ. 2 லட்சம் வரை அபராதம் வசூலிக்க முடியும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x