Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

‘நிவர்’ புயலால் பாதிக்கப்படும் மக்கள் பயன்படுத்த பள்ளி வளாகத்தில் தங்கும் முகாம்கள் அமைக்க நடவடிக்கை: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்கள் பயன்படுத்த வசதியாக பள்ளி வளாகத்தில் தங்கும் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆ.அனிதா மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நிவர் புயல், கனமழை முன்னறிவிப்பின்படி, அனைத்து வகைத் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பள்ளி வளாகத்தில் வகுப்பு அறைகளில் தங்கும் முகாம் அமைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை ஆசிரியர் அறை மற்றும் ஆவண அறைகள் தவிர மற்ற அறைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பள்ளியின் திறவுகோலை தேவையிருப்பின் பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு புயல் பற்றிய எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

பள்ளியிலோ அல்லது மாணவர்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலோ பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பின் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்துக்குள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிடும் நிலையில் உள்ள கட்டிடங்கள், சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின் அவற்றை எச்சரிக்கை குறியிட்டு வைத்து உரிய வழிமுறையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பள்ளி வளாகங்களில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அவை பாதுகாப்பாக மூடப்பட்டுள் ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும்.

மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை சிறப்பு குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்த வேண்டும். அவற்றை தரை மட்டத்தில் இருந்து உயர்த்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக் கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்தவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் வேண்டும். இத்தகைய சமயங்களில் மின்வாரிய பொறியாளரை உடனடியாகத் தொடர்பு கொண்டு சரிசெய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் ஸ்விட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காமல், உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழைக்காலம் என்பதால் பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும் என்பதால் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பள்ளியில் பத்திரப்படுத்தப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் தரைதளத்தில் வைக்கப்பட்டிருப்பின் மழை நீரினால் சேதம் ஏற்படாவண்ணம் பாதுகாப்பாக வேறு தளங்களில் மாற்றி பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x