Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?- முதல்வர் பழனிசாமி பதில்

சென்னை

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மக்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கப்படுமா?

தற்போதுதான் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பேரிடர் வரும்போது தகுந்த நிதியை ஒதுக்க அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அச்சப்படவேண்டியதில்லை. அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏரிகளுக்கு பாதிப்பு வராமல் இருக்க நீர் திறக்க வாய்ப்புள்ளதா?

ஏற்கெனவே ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், தேவையான மணல் மூட்டைகளைவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்படும் என கருதும் இடங்களில் பொதுப்பணித் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பான மக்களின் அச்சம் போக்கப்படுமா?

ஏரியில் 21.3 அடி உயரத்துக்குதண்ணீர் உள்ளது. முழு கொள்ளளவு 24 அடியாகும். 22 அடி வந்ததும் தண்ணீர் திறக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், 2 நாட்கள் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், உபரி மழைநீர் முழுவதையும் வெளியேற்றித்தான் ஆக வேண்டும். மழைப்பொழிவை பொறுத்துதான் ஏரியை திறப்பது பற்றி கூற முடியும்.

சென்னையில் மீட்பு நடவடிக்கை குறித்து?

சென்னையில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அப்பகுதிகளில் இருந்து மக்களை மீட்க துறைகள் சார்பில் ஆட்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகளில், ஆயிரத்து 519 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ 43 ஆயிரத்து 409 முதல் நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை அப்புறப்படுத்த 8 ஆயிரத்து 871 பேரும், மரங்களை வெட்டி அகற்ற 9 ஆயிரத்து 909 பேரும் தயாராக உள்ளனர். பாலங்கள், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்க வைக்க 121 பல்நோக்கு மையங்கள் தயாராக உள்ளன. மேலும், 108 ஆம்புலன்ஸ்கள் 465 எண்ணிக்கையில் தயாராக உள்ளன.

கால்நடைகள் பாதிப்புக்கு நிவாரணத் தொகை உயர்தப்படுமா?

இழப்பீடு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகை வழங்கப்படும்.

புதுச்சேரியில் மழை காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதே?

நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்பின், நிலைமையை அனுசரித்து அரசு முடிவெடுக்கும். இதுதவிர, வரும் நவ.28-ம் தேதி, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டம் நடைபெறும். அதில் கரோனா ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x