Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கவச உடை: ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி வடிவமைத்துள்ளார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்காக, ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கவச உடையை வடிவமைத்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‘பிபிஇ கிட்' எனப்படும் பிளாஸ்டிக்கால் பூசப்பட்ட கவச உடையை பயன்படுத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட இந்த கவச உடையை அணியும் மருத்துவர்கள் உள்ளிட்டோரின் உடலில் வெப்பம் அதிகமாகிறது; உள்ளே காற்று புகவாய்ப்பில்லாததால், வியர்வை அதிகமாக சுரக்கிறது. இதனால், அமைதியான மனநிலையோடு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிபிஇ கிட்டை எரித்து, அழித்தால் மட்டுமே, அதில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்க முடியும். அவ்வாறு நாள்தோறும் பிபிஇ கிட்டை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பல்வேறு துறையினர், மாற்று கவச உடை தயாரிப்பது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வளாகத்தில் உள்ள அதிவிரைவு படையின் 97-வது படைப்பிரிவின் தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கவச உடையை வடிவமைத்துள்ளார்.

எந்தவிதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எம்.பி.எஸ்., (Microbial prevention suit) எனப்படும் நுண்ணுயிரிகளை தடுக்கக் கூடிய இந்த கவச உடையை நேற்று முன்தினம் மாலை ஆவடி அதிவிரைவு படை வளாகத்தில் எரிக் கில்பர்ட் ஜோஸ் அறிமுகம் செய்தார்.

அப்போது, அவர் தெரிவித்ததாவது:

சிறப்பான முறையில் நெய்யப்பட்ட நூலிழைகளினால் நுட்பமான முறையில் மிக நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கவச உடையில், உயர் வெப்பத்தின்போது கூட திரவம் மற்றும் நுண்ணுயிரிகள் உட்புக முடியாது. மேலாடை, கீழாடை, காலுறை என 3 பகுதிகளாக உள்ள இந்த உடை, காற்று உள்ளே நுழையும் படியும், உடல் வெப்பமாகாமல் இருக்கும் படியும் தயாரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஆடையை அணிந்திருப்பதை போன்ற உணர்வை அளிக்கும் இந்த உடையை அணிந்துகொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.

எம்.பி.எஸ் எனப்படும் நுண்ணுயிரிகளை தடுக்கக் கூடிய இந்த கவச உடையை, மீண்டும் மீண்டும் தூய்மைபடுத்தி, பல மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இந்த கவச உடையை கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை உள்ளிட்டவை ஆய்வு செய்து, மிகவும் பாதுகாப்பான ஆடை என சான்றளித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x