

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சியில் உள்ளன.
தடுப்பு மருந்து இல்லை என்றாலும் தமிழகத்தில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து, பிளாஸ்மாபோன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரெம்டெசிவிர் போன்ற விலை உயர்ந்த மருந்துகள் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்ந்த மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து வருகிறது.
சுகாதார அமைப்பு அறிவிப்பு
இந்நிலையில், ரெம்டெசிவிர் எதிர்பார்த்த பலனை அளிக்காததால் அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் அந்த மருந்து தொடர்ந்து பயன்படுத்தப்படுமா என்று சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு,
‘‘ஓர் ஆய்வின் முடிவை வைத்து,ரெம்டெசிவிர் பலன் அளிக்காததால் பயன்படுத்த வேண்டாம்என்று கூறியுள்ளனர். ஆனால்,அந்த மருந்தை தடை செய்யவில்லை. தவிர, தமிழகத்தில் அது நல்ல பலனை கொடுத்து வருகிறது. அதனால், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து பயன்படுத்தப்படும்” என்றனர்.