Published : 19 Oct 2015 12:10 PM
Last Updated : 19 Oct 2015 12:10 PM

நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு

தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ 110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'தற்போது தமிழ்நாட்டில் 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக தரமான காய்கறிகள் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், புளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வெளிச் சந்தையில் உயர்ந்த போது 'விலை நிலைப்படுத்தும் நிதியம்' பயன்படுத்தப்பட்டு, கூட்டுறவு விற்பனை நிலையங்களின் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை குறைந்த விலையில் விற்கும் ஒரு விற்பனைத் திட்டம், 24.5.2015 அன்று முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 25 கூட்டுறவு விற்பனை மையங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு அரை கிலோ பாக்கெட் 53.50 ரூபாய் என்ற விலையிலும், உளுந்தம் பருப்பு ஏ ரகம் அரை கிலோ 56 ரூபாய் என்ற விலையிலும், பி ரகம் அரை கிலோ 49.50 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில், பருப்பு அதிகம் உற்பத்தி செய்யப்படும் வட மாநிலங்களில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக பருப்பு வகைகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படவில்லை. எனவே, துவரம் பருப்பு விலை வெளிச்சந்தையில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து 5000 மெட்ரிக் டன் முழு துவரை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. இது பற்றித் தெரிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்

துவரையிலிருந்து 500 மெட்ரிக் டன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழக அரசால் மத்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு 500 மெட்ரிக் டன் துவரையை வழங்க உத்தரவிட்டு, அது சென்னை துறைமுகத்தில் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட துவரை, அரவை ஆலைகள் மூலம் துவரம் பருப்பாக மாற்றப்பட்டு, கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த துவரம் பருப்பு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, 1/2 கிலோ பாக்கெட்டு 55 ரூபாய் என்ற விலையிலும், 1 கிலோ பாக்கெட்டு 110 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.

சென்னையில் டிசியுஎஸ், வடசென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 36 கூட்டுறவு பண்டக சாலைகள், 20 அமுதம் விற்பனை அங்காடிகள் என மொத்தம் 56 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். மேலும், மதுரையில் 11 கூட்டுறவு பண்டக சாலை மூலமும், திருச்சியில் 14 பண்டக சாலைகள் மூலமும், கோயம்புத்தூரில் 10 விற்பனை அங்காடிகள் மூலமும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும். மொத்தத்தில் 91 விற்பனை அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும். இந்த விற்பனை 1.11.2015 அன்று துவங்கப்படும்.

இதுவன்றி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் ஒரு கிலோ துவரம் பருப்பு / கனடா பருப்பு, ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தலா 3 கிலோ 30 ரூபாய் என்ற விலையிலும், ஒரு லிட்டர் பாமாலின் எண்ணெய் 25 ரூபாய்க்கும் தொடர்ந்து வழங்கப்படும்' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x