Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும்: அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தி உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு,பிரச்சாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,ஆளுங்கட்சியான அதிமுக அனைத்து பணிகளுக்குமான குழுவை சமீபத்தில்தான் அமைத்துள்ளது.இதற்கிடையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மூத்த அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கூட்டணி தொடர்பாக அவருடன் அதிமுக தலைமை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், அதிமுகவில் சமீபத்தில் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நேற்று மாலை 5.15 மணிக்கு தொடங்கியது. இதில், அவைத் தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இதுதவிர சமீபத்தில் நியமிக்கப்பட்ட 30 மண்டலங்களின் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 73 நிர்வாக ரீதியிலான மாவட்டங்களின் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இதர அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், அடுத்த கட்ட தேர்தல் பணிகள் குறித்தும் அனைவருக்கும் ஓபிஎஸ் ஆலோசனை வழங்கினார். இபிஎஸ்மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களும் பேசினர்.

‘‘எனக்குப் பின்னும் இந்த கட்சி நூறாண்டுகள் நிலைத்திருக்கும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்க்கதரிசனத்துடன் கூறினார். அது சத்தியமான உண்மை. அனைவரும் மண்டல பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பூத் முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி சிந்திக்க வேண்டாம். தற்போதைய சூழலில், நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை கருத்தில் கொண்டு, தேர்தலை சந்திக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.மாற்றுக் கருத்து இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’’ என்று முதல்வர் பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்டணி தொடர்பாக பாஜகவின் நடவடிக்கைகள் அச்சுறுத்துவது போல உள்ளதாக, கூட்டத்தில் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவிக்க, அதற்கு பழனிசாமி, ‘‘இப்போதுபோல தொடர்ந்து செயல்படுவோம்’’ என்று கூறியுள்ளார். கூட்டம் இரவு 7 மணி அளவில் முடிவடைந்தது. அப்போது, மாவட்டப் பிரிப்பு தொடர்பாக சில நிர்வாகிகள் பேசியதால், சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை என்று வைத்திலிங்கம், ஆர்.பி.உதயகுமார் கூறினர்.

இதற்கிடையில், ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அப்சரா ரெட்டி, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x