Last Updated : 20 Nov, 2020 03:14 AM

 

Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டும் நிதியில் முறைகேடு? - விசாரணை நடத்த திட்ட இயக்குநர் உத்தரவு

வெள்ளானைப்பட்டி ஊராட்சியில், தனிநபர் கழிவறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தனிநபர் கழிவறை கட்ட மானிய தொகை ரூ.12 ஆயிரம் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ரூ.7,200,மாநில அரசு ரூ.4,800 பங்களிப்பில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தில் இருந்து பயனாளிகளுக்கு மூன்று கட்டங்களாக மானிய தொகை அளிக்கப்படுகிறது. கழிவறை கட்டி முடித்த பின்னர், பயனாளிகள் கழிவறையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து உள்ளாட்சி நிர்வாகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டு களுக்கு முன் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் ஒரே கழிவறையின் கதவு மற்றும் வண்ணங்களை மாற்றி, பல கழிவறைகளை கட்டியதாக நிதியை பெற்று முறைகேடு செய்த காட்சி இடம்பெற்றது போல, கோவை மாவட்டம் வெள்ளானைப் பட்டி ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள் ளன.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் என்.லோகு கூறும்போது, ‘‘வெள்ளானைப்பட்டி, ஆண்டக்கா பாளையம், கைக்கோளம்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய குக்கிராமங் களில் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தனி நபர் கழிவறை கட்டுவதற்காக 600-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர்.

ஆனால், நிதி இருப்பு குறைவின் காரணமாக, முதலில் விண்ணப்பித்த 157 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, தலா ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.18 லட்சத்து 72 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், பெறப்பட்ட நிதிக்கேற்ப இந்தப்பகுதியில் தனிநபர் கழிவறைகள் கட்டப்படவில்லை. 30 முதல் 50 வீடுகளில் மட்டுமே கழிவறை கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகள், முன்னரே கட்டப்பட்ட தனி நபர் கழிவறை முன் நின்று வண்ணங்களை மாற்றி மாற்றி அடித்து புகைப்படம் எடுத்துசமர்ப்பித்து தொகையைப் பெற்று மோசடி செய்துள்ளனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளேன்’’ என்றார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் கூறும்போது,‘‘இந்த நிதி முறைகேடு தொடர்பான புகார் கிடைக்கப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சியில் ஆய்வு நடத்தி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வட்டார வளர்ச்சி அலுவலர், தணிக்கைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x