Published : 18 Nov 2020 06:26 PM
Last Updated : 18 Nov 2020 06:26 PM

என்எல்சி நிறுவனத்தில் தொடரும் விபத்துகள், உயிரிழப்புகள்; பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொடரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் இனி ஏற்படா வண்ணம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென சிஐடியூ மாநில நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியூ மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன் வெளியிட்ட அறிக்கை:

“நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகக் கண்காணிக்கத் தவறியதன் விளைவாகத் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதுமான சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த ஆறு மாதத்திற்கு முன் பராமரிப்பின்போது பாய்லர் வெடித்துச் சிதறியதில் 16க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானார்கள். இதற்கு முன்பும் இதேபோன்ற விபத்துகள் நடந்துள்ளன. இதுபோன்ற தொடர் விபத்துகளைத் தவிர்க்க முறையான, பராமரிப்புப் பணிகளில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியது.

ஆனால், இன்றுவரை சுரங்கம் மற்றும் அனல் மின்நிலையங்களில் பணிப் பாதுகாப்பில் போதுமான கவனம் செலுத்தாமல் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதன் விளைவாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 6-வது யூனிட்டில் ஏற்பட்ட விபத்தில் சக்திவேல் என்ற ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

பாய்லருக்குக் கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சக்திவேல், எதிர்பாராத வகையில் அவருடைய கை கன்வேர் பெல்ட்டில் சிக்கித் துண்டாகி உயிரிழந்துள்ளார்.

ஓடிக்கொண்டிருக்கும் கன்வேயரில் சக்திவேலை வேலை செய்யுமாறு அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததின் விளைவே இந்த உயிரிழப்புக்குக் காரணமாகும். இதுபோன்ற ஆபத்தான பணி இடங்களில் ஒரு தொழிலாளியை மட்டும் பணிக்கு அமர்த்துவதைத் தவிர்த்திருந்தால் சக்திவேலின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

எனவே, ஆபத்தான பணியை நிர்பந்தம் செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது. விபத்தில் உயிரிழந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதைவிட கூடுதல் இழப்பீடு வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க என்.எல்.சி. நிறுவனத்தை சிஐடியு வலியுறுத்துகிறது.

மேலும் இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படா வண்ணம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்”.

இவ்வாறு சிஐடியூ மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x