Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இப்போதைக்கு இல்லை வெள்ளம் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், பூண்டியில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. (அடுத்த படம்) செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள். படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை

செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது. எனவே வெள்ளம் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015-ம் ஆண்டு பெய்த மிக கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, தண்ணீர் பெருமளவு திறந்துவிடப்பட்டது. அதனால் சென்னைக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.

ஒரே நாளில் 108 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பரவலாக தகவல் பரவியது. அத்துடன் 2015-ம் ஆண்டு சென்னையைவெள்ள நீர் சூழ்ந்திருந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதனால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஏரியை கண்காணித்தனர். பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன்மற்றும் அதிகாரிகள் நேற்று ஏரியைப்பார்வையிட்டு, நீர்வரத்து மற்றும்மதகுகளின் நிலையை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அசோகன் கூறியதாவது:

2015-ம் ஆண்டு மிக கனமழை கொட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கு பெருமளவு தண்ணீர் வந்து, பாதிப்பு ஏற்பட்டதுபோல இப்போது ஏற்பட வாய்ப்பில்லை. தற்போது ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. விநாடிக்கு 480 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 21.17 அடியாகவும், நீர் இருப்பு 2,889 மில்லியன் கன அடியாகவும் (மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி) உள்ளது.

ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 22அடியை எட்டினால் தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போது நீர்வரத்து குறைந்துவிட்டதால், தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். ஏரி நிரம்பும் நிலையில், மக்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்த பிறகே உபரி நீர் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிரம்பி, கடல் போல காட்சியளிப்பதைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர். இதனால் அங்கே திடீர் கடைகள் முளைத்துள்ளன. ஏரியில் மீன்கள் பிடிக்கப்படுவதால், அவற்றையும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டால் திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, சிறுகளத்தூர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அங்கு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறைஅதிகாரிகள் செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், தனியார் கட்டிடங்கள், சமுதாய நலக் கூடங்களை தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x