Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

அதிக இடங்களில் போட்டியிட அதிமுக திட்டம் கூட்டணியில் பாஜக, பாமகவுக்கு இடம் உண்டா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட அதிமுக நினைப்பதால், கூட்டணியில் பாஜக, பாமகவுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் தற்போதைய கட்சிகளே இடம்பெறும் நிலை உள்ளது. முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் பெயரை அனைவரும் முன்மொழிந்துள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமி பெயரை கட்சித் தலைமை முன்னிறுத்தினாலும், கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் நிலைப்பாடு பற்றி தெரியவில்லை.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக,தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில்பாஜக, பாமக, தேமுதிகவின் நடவடிக்கைகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. கிங் மேக்கராக விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். தமிழக அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, ட்விட்டர் பதிவு ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தின. அதிமுகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதும், அதிமுக கூட்டணியில் தொடர்வதாக பாமகவினர் அறிவித்தனர்.

அதேபோல, எம்ஜிஆர் பெயரை பாஜக பயன்படுத்தியது, அரசு தடை விதித்த பிறகும் வேல் யாத்திரையை தொடர்வது ஆகியவை அதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதிமுக -பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

தவிர, அதிமுகவை பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 தேர்தல்களின்போதும், ‘அதிக தொகுதிகளில் போட்டியிடுவது’ என்றநிலைப்பாட்டையே எடுத்தார். தற்போதும் அதுவே பொருத்தமாக இருக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். எனவே, கூட்டணியில் எந்த கட்சியை வைத்துக்கொள்வது என்பது குறித்துஇப்போதே தலைவர்கள் சிந்தித்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக இருக்கும் சூழலில், அக்கட்சியை பகைத்துக் கொள்வது சரியாக இருக்குமா என்பதையும் அதிமுகவினர் யோசிக்காமல் இல்லை. ஆனால், பாஜக,பாமகவை கூட்டணியில் வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 70 முதல் 80 தொகுதிகளை இழக்கவேண்டி வரும் என அதிமுக கருதுகிறது. அதிலும் குறிப்பாக, அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டல தொகுதிகளை பாஜகவுக்கும், வடதமிழகத்தில் அதிக இடங்களை பாமகவுக்கும் அளிக்கவேண்டி வரும். இதன்மூலம், அதிமுகவின் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். பாஜகவினரும் அவ்வப்போது ‘கூட்டணி ஆட்சி’ என்று பேசி வருவதற்கு, அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அதிமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெற முடியும். இதுபற்றி உள்ளூர் கள நிலவரத்துடன் நிர்வாகிகள் அனைவரும் தலைமைக்கு தெரிவித்துள்ளனர். அதிமுகவில் மாவட்டம் தோறும் நடைபெற்ற முதல்வரின் ஆலோசனைக் கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பிலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில், திமுக கூட்டணி தவிர, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இருப்பதால் ஓட்டு பிரிய வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் பாஜக, பாமகவுக்கு அதிக இடத்தை விட்டுக்கொடுத்தால் இழப்பு அதிகரிக்கும். அதேநேரம், தேமுதிக, தமாகா பலமாக உள்ள இடங்களை அக்கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தல் முடிவுகள், சட்டப்பேரவை தேர்தலுக்கு பொருந்தாது என்றாலும், கள நிலவரத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இதுதொடர்பாக விரைவில் முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x