Last Updated : 12 Nov, 2020 05:26 PM

 

Published : 12 Nov 2020 05:26 PM
Last Updated : 12 Nov 2020 05:26 PM

கன்னியாகுமரியில் தீபாவளிக்குப் பின்னரே படகு சேவையைத் தொடங்க வாய்ப்பு: தொடரும் குளறுபடியால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நாகர்கோவில்

கன்னியாகுமரியில் முதல்வர் அறிவித்த பின்னரும் படகுப் போக்குவரத்தைத் தொடங்குவதில் தொடர் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதனால் தீபாவளிக்குப் பின்னரே படகு சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக படகுப் போக்குவரத்து உள்ளது. கரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 8 மாதங்களாக அனுமதி இல்லாத நிலையிலும் கடந்த இரு மாதங்களாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தது. அதே நேரம் படகு சேவை இல்லாததால் கன்னியாகுமரி களை இழந்தே காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி குமரி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். விவேகானந்தர் பாறைக்கான படகு போக்குவரத்து தொடங்கும் என அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று படகு சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி படகு இல்லத்தில் காத்திருந்தனர். ஆனால் முறையான உத்தரவு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வராததால் படகுகளின் வெள்ளோட்டம் மட்டுமே நடைபெற்றது.

இதனால் இன்று படகு சேவை நடைபெறும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ள மக்கள் கன்னியாகுமரியில் குடும்பத்துடன் சுற்றி பார்த்து வருகின்றனர். இதனால் ஓரளவு கூட்டம் காணப்பட்டது. படகு சவாரி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் ஓட்டல், கடைகள், மற்றும் நடைபாதை கடைகளும் திறந்து கன்னியாகுமரி பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் இன்றும் படகு சேவை நடைபெறாமல் படகு தளத்திலே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினரிடம் கேட்டபோது; தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து விவேகானந்தா, குகன், பொதிகை ஆகிய 3 படகுகளையும் போக்குவரத்திற்கு தயார் நிலையில் வெள்ளோட்டம் நடத்தி நிறுத்தியுள்ளோம்.

இவற்றை சவாரிக்கு விட்ட பின்பு நவீன புதிய படகுகளான திருவள்ளுவர், தாமிரபரணியையும் விடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தோ, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாத்திடம் இருந்தோ படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான அனுமதியோ, உத்தரவோ வரவில்லை. இதுனால் தான் படகு போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை.

இனி தீபாவளி முடிந்த பின்னரே படகு சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்றனர்.

முதல்வர் அறிவிப்பிற்கு பின்னரும் படகு போக்குவரத்து தொடங்காமல் குளறுபடி ஏற்பட்டிருப்பது சுற்றுலா பயணிகள், சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி, மற்றும் அதை தொடர்ந்து இரு நாட்கள் கன்னியாகுமரியில் அதிகமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x