Published : 07 Oct 2015 07:49 AM
Last Updated : 07 Oct 2015 07:49 AM

கோவையில் முதல்முறையாக உயிரோடு இருப்பவரின் கல்லீரல் சிறுமிக்கு பொருத்தம்

கோவையில் முதல்முறையாக உயிரோடு இருப்பவரின் கல்லீர லின் ஒரு பாகத்தை எடுத்து சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் பர்கில் பகுதியைச் சேர்ந்தவர் டி.போஜன், விவசாயி. மனைவி ஸ்டெல்லா, அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் ஸ்டெஃபி(17). உதகையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார்.

இந்நிலையில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஸ்டெஃபி, கடந்த மாதம் 13-ம் தேதி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கோமா நிலைக்குச் சென்ற அவரை காப்பாற்றுவதற்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சிறுமிக்கு தனது கல்லீரலை தர அவரது மாமா டி.ரிச்சர்ட் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து ரிச்சர்டின் கல்லீரலின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அறுவைசிகிச்சை மூலமாக சிறுமிக்கு பொருத்தப்பட்டது. மருத்துவமனையின் தொடர் கண்காணிப்பில் இருந்த சிறுமியின் உடல் நலம் முன்னேற்றம் ஏற்பட் டதை அடுத்து நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ நிபுணர் குருசரண்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை இது. சுமார் 14 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில், கல்லீரலை தானமாக அளித்த ரிச்சர்டின் கல்லீரலில் 550 கிராம் எடுக்கப்பட்டு சிறுமிக்கு பொருத்தப்பட்டது.

கல்லீரலை பொருத்தவரை ஒருவரது உடல் எடைக்கு தகுந்தாற் போல் கல்லீரலின் 30-35 சதவீதம் இருந்தால் போதும், அதைக் கொண்டே வாழ்ந்து விடலாம். இதன்படி, சிறுமியின் உடல் எடை 45 கிலோ என்பதால் அவரது உடல் எடைக்கு தகுந்தாற்போல் எடுத்து பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இது போன்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் சிறப்பு பெற்றது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லை. டெல்லி போன்ற நகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் பின்னாளில் வழக்கம் போல் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம். அவ்வப்போது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். இந்த சிகிச்சைக்கு ரூ. 25 லட்சம் வரை செலவு பிடிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x