Published : 09 Nov 2020 07:23 PM
Last Updated : 09 Nov 2020 07:23 PM

உயர்மின் கோபுர விவகாரம்; விவசாயிகள் மீது பழிசுமத்துவதா?- முதல்வருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் நிலம் தராமல் சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்றும், வெளி மாநிலங்களிலிந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வருவதற்காகத்தான் இந்த உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது என்றும் முதல்வர் பழனிசாமி தவறான தகவலைக் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் 08.11.2020 அன்று இணையவழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

* நவம்பர் - 26 பொது வேலை நிறுத்தம் - சாலை மறியல்

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் விரோதச் சட்டங்களையும், தொழிலாளர் நலனுக்கு விரோதமான சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நவம்பர் 26-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்திட அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பதுடன் நவம்பர் 27-ம் தேதி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து நவம்பர் 26-ம் தேதி கிராமப்புறங்களில் பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதுடன், பல நூற்றுக்கணக்கான இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபவடுவதென்று மாநிலக் குழு தீர்மானிக்கிறது.

விவசாயிகளின் வாழ்வை அடியோடு அழிக்கும் வேளாண் விரோதச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கிடும் வகையில் ஆயிரமாயிரமாய் விவசாயிகள் பங்கேற்பதுடன், இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

விவசாய நிலத்தில் பெட்ரோல் குழாய் பதிப்பு

* கோவை மாவட்டம் இருகூரிலிருந்து - பெங்களூர் தேவனகுந்தி வரை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களுக்குப் பதிலாக சாலையோரமாக குழாய் பதிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்று விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். நில உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இத்திட்டத்திற்கு நிலத்தைத் தர விரும்பமில்லை என்று தனித்தனியாக தங்களது ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி மத்திய அரசிதழில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய தாலுக்காவுக்கு உட்பட்ட பல நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்களை இத்திட்டத்திற்காக அரசு எடுத்துக் கொண்டதாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டவிரோதமான அடாவடித்தனமான இந்நடவடிக்கையை மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய அரசு, நேரடியாக நிலம் தொடர்பான பிரச்சினையில் மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் இவ்வாறு கையகப்படுத்திக் கொண்டிருப்பது மாநில உரிமையில் அத்துமீறி செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நிலம் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு தன்னிச்சையாக மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தும் செயலைக் கண்டித்து ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் பதிப்பைக் கண்டித்து நவம்பர் 30-ம் தேதி ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் முழுமையாகப் பங்கேற்பது என்று மாநிலக்குழு முடிவு செய்கிறது.

விவசாயிகள் மீது பழி சுமத்தும் முதல்வருக்கு கண்டனம்

தமிழக முதல்வர் சமீபத்தில், திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் நிலம் தராமல் சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள். வெளி மாநிலங்களிலிந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வருவதற்காகத்தான் இந்த உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது என்று தவறான தகவலைக் கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு, நான்கு வழிச்சாலைகள் அமைப்பதற்கு விவசாயிகள் நிலத்தை மனமுவந்து அளித்திருக்கிறார்கள் என்பதை முதல்வர் மறந்துவிட்டுப் பேசுகிறார்.

உயர்மின் கோபுர விஷயத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களுக்கு, செல்போன் டவருக்கு வழங்குவதுபோல் மாத வாடகை வழங்க வேண்டும். கேபிள் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கை குறித்து எதுவும் பேசாமல் விவசாயிகள் சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள் என்று முதல்வர் பழி சுமத்தியிருப்பது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

மாற்றுக் கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிக்காமலேயே மத்திய - மாநில அரசுகள் அடம்பிடித்து வருகின்ற்ன. எனவே, விவசாயிகளைக் குற்றம் சொல்வதை விட்டுவிட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது''.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x