Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

சமூக வலைதளம் மூலம் சிறுமிகளுக்கு குறிவைப்பு: சென்னையில் 3 பேர் கும்பல் கைது

சமூக வலைதளங்கள் மூலம் சிறுமிகளிடம் அத்துமீறி நடக்கும் கும்பலை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்த சிறுமி, அதில் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறவே, அவர்கள் உடனடியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மயிலாப்பூர் மகளிர் போலீஸார் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மகேந்திரன், அனாகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆண், பெண் என இரண்டு பெயர்களிலும் இவர்கள் ஏராளமான போலி கணக்குகளை வைத்துள்ளனர்.

இந்த போலி கணக்குகள் மூலம், பள்ளி சிறுமிகளிடம் பழகும் இந்த கும்பல், சிறுமிகள் தங்களது பக்கத்தில் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்துள்ளனர். அவற்றை வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிர்ந்து வந்துள்ளனர். இன்னும் பல சிறுமிகளுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் தங்களது செல்போனில் ஏராளமான சிறார் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை பதிவு செய்து வைத்ததையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கும்பல் மேலும் ஏதேனும் பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா, இவர்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x