Last Updated : 07 Nov, 2020 03:23 PM

 

Published : 07 Nov 2020 03:23 PM
Last Updated : 07 Nov 2020 03:23 PM

தடையை மீறி குண்டாறு அணையில் குளிக்கும் இளைஞர்கள்: கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தென்காசி

தடையை மீறி குண்டாறு அணையில் குளிக்கும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகள், மற்றும் அணைகள் இயற்கை எழில் சூழ்ந்தவை.

குற்றாலம் அருவிகளில் சாரல் சீஸன் காலங்களிலும், சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் செல்லும் காலங்களிலும் ஏராளமானோர் குளிப்பது வழக்கம். மேலும், கடனாநதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் அணைப் பகுதிகளுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குளிக்கின்றனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இந்த தடை உத்தரவு நீடிக்கிறது.

மேலும், அணைப் பகுதிகளில் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் மக்கள் குளிப்பதைத் தடுக்க குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் மக்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது.

ஆனால், அணைப் பகுதிகளுக்கு சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் தடையை மீறிச் சென்று குளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டாறு அணையில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, அணைப் பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் சமீபத்தில் கூறினார்.

இருப்பினும், தடையை மீறி அணைப் பகுதியில் குளிப்பது தொடர்கிறது. குண்டாறு அணையில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் பகுதிக்கு ஏராளமான இளைஞர்கள் சென்று குளித்து வருகின்றனர்.

இந்த வழியாக நடந்து சென்று செல்ஃபி புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். எச்சரிக்கை விடுத்தும் ஆபத்தை உணராத இளைஞர்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன. இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்று குளிப்பது தொடர்கிறது.

அணைகளில் குளிப்பதைத் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், எச்சரிக்கையை மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்று குளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x