Published : 06 Nov 2020 03:44 PM
Last Updated : 06 Nov 2020 03:44 PM

கிராம சபைக் கூட்டம் ரத்து விவகாரம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தாதது குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் குடியரசு நாள் ஜன.26, தொழிலாளர் தினம் மே.1, சுதந்திர தினம் ஆகஸ்டு 15, காந்தி ஜெயந்தி தினம் அக்.2 ஆகிய நான்கு தினங்களில் ஆண்டுக்கு நான்கு முறை, கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும், அதன்படி நடத்தப்பட்டும் வருகின்றன.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், செப்டம்பர் 26-ம் தேதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கரோனா தொற்றை காரணம் காட்டி அக்டோபர் 2-ம் தேதி நடக்க இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் வாதிட்டார். அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜரானார்.

அந்த மனுவில், ‘கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபைக் கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது.

ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை நடத்தக் கோரி ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, இதுகுறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதே கோரிக்கையுடன் திமுக எம்எல்ஏ கே.என்.நேரு தொடர்ந்த வழக்குடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x