Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

கோவளம் முகத்துவாரம் தூர்வாரும் பணிகளில் கடல் மணல் திருட்டு

கோவளம் கடற்கரையில் முகத்துவாரம் தூர்வாரப்படும் பகுதியில் குவித்துவைக்கப்பட்டுள்ள கடல் மணல்.

கேளம்பாக்கம்

கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மழைநீர் கடலுக்கு செல்வதற்காக, கோவளம் கடற்கரையில முகத்துவாரம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், லாரிகளில் கடல் மணல் திருடிச் செல்லப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் முதல் நாவலூர் வரையில் உள்ள கிராமங்களிலிருந்து மழைநீர், கால்வாய்கள் மூலம் ஓஎம்ஆர் சாலையை கடந்து சென்று முட்டுக்காடு அருகே கோவளம் கடலில் கலக்கின்றன.

இதனால், மழைக் காலத்தின்போது மேற்கண்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் கோவளம் கடற்கரையில் உள்ள முகத்துவாரத்தில் முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள முகத்துவார பகுதி ரூ.12 லட்சம் செலவில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் மணலை, கரையில் கொட்டி பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நன்னீர் மற்றும் உப்புநீர் கலந்த மணல் என்பதால் தூர்வாரப்படும் மணல் இரவு நேரத்தில் லாரிகளில் சென்னைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும். இவ்வாறு கடத்திச் செல்லப்படும் 10 லாரி கடல் மணலுடன், 5 லாரி ஆற்றுமணல் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, "கோவளத்தில் கடல் மணல் திருடப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x