Published : 05 Nov 2020 02:10 PM
Last Updated : 05 Nov 2020 02:10 PM

கோவை அருகே கடன் தொல்லையால் பரிதாபம்; வாழைப் பழத்தில் விஷம் வைத்து சாப்பிட்டு கணவன் - மனைவி - மகள் தற்கொலை

கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில் உள்ள அமர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் சிவமுருகன் (50), பால் வியாபாரி. இவரது மனைவி வைரராணி (40). இவர்களுக்கு யுவஸ்ரீ (22), ஹேமா (19) என்ற மகள்கள் உள்ளனர்.

சிட்பண்ட் நடத்தி வந்த சிவமுருகன் பலருக்குக் கடன் கொடுத்துள்ளார். அவர்கள் சரிவர கடன் தொகையை திருப்பித் தரவில்லை. இதனால் தன்னிடம் சீட்டு போட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தர முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதன் பின்னர் சிவமுருகன் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிவமுருகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று (நவ. 4) நள்ளிரவு சிவமுருகன் வாழை பழத்தில் விஷம் (சயனைடு) வைத்து, மனைவி , மகள்களுக்கு அளித்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதில், சிவமுருகன், வைரமணி, யுவஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மகள் ஹேமா, தந்தை அளித்த விஷம் கலந்த பழத்தை சாப்பிடவில்லை. அதனால் அவர் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீஸார் இன்று (நவ. 5) அதிகாலை சம்பவ இடத்துக்குச் சென்று மூவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அங்கு சிவமுருகன் எழுதி வைத்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாக எழுதப்பட்டு இருந்தது. வடவள்ளி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x