Published : 02 Oct 2015 09:50 AM
Last Updated : 02 Oct 2015 09:50 AM

டெங்கு குறித்து தகவல் தராத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் தராத மருத்துவமனைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் உள்ள 505 மருத்துவமனைகளும் டெங்கு பாதிப்பு தகவல்களை மாநகராட்சிக்கு அவ்வப்போது அளிக்க வேண்டும். ஆனால், இவற்றில் 165 மருத்துவமனைகள் டெங்கு பாதிப்பு தகவல்களை தரவில்லை. எனவே தகவல்களை உடனே தரும்படி அந்த மருத்துவமனை களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நோட்டீஸ் அனுப்பி 48 மணி நேரத்துக்குள் தகவல்களை தரவில்லை என்றால், மருத்துவமனைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “டெங்கு, காசநோய் உள்ளிட்ட ஒரு சில நோய் பாதிப்புகள் குறித்து அரசு, மாநகராட்சி, தனியார் என அனைத்து மருத்துவமனைகளும் மாநகராட்சிக்கு கட்டாயமாக தகவல் அளிக்க வேண்டும். ஆனால் 165 மருத்துவமனைகள் தகவல் அளிக்காமலும், சரியான தகவல் கொடுக்காமலும் உள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தகவல் தரவில்லை என்றால், அபராதம் விதிப்பது, மருத்துவமனை பிறப்பு-இறப்புகளை பதிவு செய்ய தடை விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

சென்னையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 55 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவிக்கிறது. ஆனால், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதற்கு மேலும் இருக்கலாம் என்று மாநகராட்சியே ஒப்புக்கொண்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் அதிகம் இருக்கும் பகுதிகளின் அடிப்படையில் சென்னையில் சுமார் 50 இடங்கள் கவனத்துக்குரிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் காய்ச்சலுக்கான பரிசோதனை, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், அரசு மற்றும் தனியார் கட்டிட வளாகங்களில் தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மாநகராட்சி சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x