Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

கரோனா வைரஸ் தொற்று காலத்தில் வீடு மாறியவர்கள் வாக்களிக்க நடவடிக்கை தேவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கட்சிகள் கோரிக்கை

கரோனா காலத்தில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. வரும் 16-ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றுமுதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன. இதையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த இக்கூட்டத்தில், அதிமுக சார்பில் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் எம்பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோவன், பாஜக சார்பில் காளிதாஸ், கிருஷ்ணகுமார், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், ராஜசேகர், தேமுதிக சார்பில் துணை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் நல்லதம்பி, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கலைவாணன், பொதுச்செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): கரோனா காரணமாக வீடு மாறியவர்களுக்கு புதிய முகவரியில் அவர்களது பெயரைச்சேர்க்க வேண்டும். வெளிநாடுவாழ் தமிழர்கள் பெயரை சேர்க்கவேண்டும். நெரிசலின்றி வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): நாங்கள் 3 மனுக்களை அளித்துள்ளோம்.வாக்காளர் பட்டியலை நேர்மையாகதயாரிக்க வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதை சரிசெய்ய வேண்டும். அரசியல்வாதிகள் குறிப்பிடும் பெயர்களை நீக்கும் நடைமுறை கூடாது. கரோனா காலத்தில் குடிபெயர்ந்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

பார்த்தசாரதி (தேமுதிக): வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் பெயர்கள் இடம்பெறக் கூடாது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க வாய்ப்புஅளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்களுக்கு சிறப்பு முகாம்களில் உடனடியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம்

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்வெளியிட்டது முதல் அக்.31-ம் தேதி வரை புதிதாக பெயர் சேர்க்க2.45 லட்சம், தொகுதி விட்டு வேறு தொகுதிக்கு இடமாறுதல் தொடர்பாக 4.89 லட்சம் உட்பட மொத்தம் 9.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, அதில் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் டிச.15 வரை நடக்கும்.

அந்தந்த வாக்குச்சாவடிகளில் நவ.21, 22, டிச.12, 13 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜன.20-ல் வெளியிடப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிலை முகவர்களை நியமித்து, சிறப்பு முகாம்களின்போது பட்டியல் விவரங்களை சரிபார்க்க உதவலாம். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவங்களில் தகவல் தரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x