Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

478 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி கொண்டாட்டம்; திருமலை திருப்பதி கோயிலில் அதிரசம் அமுது படையல் வழிபாடு: ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தகவல்

திருவாரூர் மாவட்டம் சித்தாய்மூர் பொன்வைத்த நாதர் கோயிலில் உள்ள செப்பேடு.

தஞ்சாவூர்

கி.பி.16-ம் நூற்றாண்டில் கோயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது என்பது திருமலை திருப்பதி வேங்கடவன் கோயிலில் உள்ள தமிழ்கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆய்வாளர் குடவாயில் எம்.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமலை திருப்பதி வேங்கடவன் கோயிலில் கி.பி.1542-ம் ஆண்டு தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில், ‘திருப்பதி வேங்கடவனுக்கு தீவாளி நாள் அதிரசப்படி இரண்டு’ என்ற அமுது படையல்கட்டளை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 478 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி பண்டிகை நாளில் இறைவனுக்கு அதிரசம் படையல் வைத்து வழிபாடு நடந்துள்ளதை அறிய முடிகிறது.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சித்தாய்மூர் சிவன் கோயில் இறைவன் பொன்வைத்த நாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமமக்களும், அரசு அலுவலர்களும் சேர்ந்து தாங்கள் பெறும் கூலியில் இருந்து, ஒரு சிறு தொகையை அளித்துள்ளனர். இது, தீபாவளி அபிஷேக விழா என கி.பி.1753-ம் ஆண்டு டிச.7-ம் தேதி எழுதப்பெற்ற ஒரு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செப்பேட்டில் உள்ளபடிசித்தாய்மூர் மாகாணத்தின் நத்தப்பள்ளம், பள்ளியமூலை, பனங்காடி, சூரமங்கலம், உத்திரங்குடி, மடப்புரம், பள்ளிச்சந்தம், கோமளக்கோட்டை, கூமூர், நெடுஞ்சேரி, செம்பியமணக்குடி, முள்ளிகுடி, சிங்களாந்தி, முத்தரசநல்லூர் உள்ளிட்ட 26 ஊர்களைச்சேர்ந்தவர்கள் சாதி வேறுபாடின்றி சித்தாய்மூர் பொன்வைத்த நாதருக்கு தீபாவளி அபிஷேகம் உள்ளிட்ட விழாக்களை நடத்தியுள்ளனர் என்பதும், இக் கோயிலுக்காக இலுப்பை, தென்னைஉள்ளிட்ட மரங்களை நட்டும்தொண்டு புரிந்துள்ளனர் என்பதை அந்த செப்பேடு தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x