Published : 03 Nov 2020 11:08 AM
Last Updated : 03 Nov 2020 11:08 AM

தமிழ்நாட்டின் அடையாளமாக தனிக்கொடி பறக்க விட்டதற்காக பொழிலன் உள்ளிட்டோர் கைது; அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டின் அடையாளமாக தனிக்கொடி பறக்க விட்டதற்காக, பொழிலன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்திருப்பது, அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டின் அடையாளமாக தனிக்கொடி பறக்க விட்டதற்காக, பொழிலன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து, நாட்டுக்கு எதிரி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். எனவேதான் அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆஃப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. அதன் பொருள் நாடுகளின் ஒன்றியம் என்பதுதான்.

இந்தக் கருத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நான் பலமுறை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன். புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றேன்.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. அது 50 மாநிலங்கள் சேர்ந்த ஒரு ஒன்றியம். அங்கே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி, தனி அரசு முத்திரை இருக்கின்றது. தனித்தனிச் சட்டங்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் பாதி அளவு கூட இல்லாத சுவிட்சர்லாந்து நாட்டில், கேண்டன்கள் எனப்படும் 26 தனித்தனி ஒன்றியங்கள் உள்ளன. அந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதாக இருந்தால், அந்த 26 ஒன்றியச் சட்டப்பேரவைகளும் ஒப்புதல் தர வேண்டும்.

இது போல இன்னும் எண்ணற்ற எத்தனையோ நாடுகள் கூட்டாட்சி அமைப்பைக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவும் அத்தகைய கூட்டாட்சி அமைப்பு ஒன்றியம்தான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி இருந்த, தனிக் கொடி ஏற்றும் உரிமையை, பாஜக அரசு பறித்து விட்டது.

ஐரோப்பாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி முத்திரை உள்ளது; ஒவ்வொரு கிராமத்திற்கும் தனிக்கொடி உள்ளது. கல்லறைகளில்கூட தனித்தனி முத்திரைகள் பதிக்கப்படுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கியது. அதற்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது.

இன்று கர்நாடக மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கன்னடக் கொடி ஏற்றப்படுகின்றது.

அதுபோல, தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை; அதைத் தடுக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை. நாகாலாந்து மாநிலம் தனிக்கொடி கேட்கின்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தனித் தனி முத்திரை இருக்கின்றது. அதுபோல தனிக்கொடியும் வேண்டும்.

கருத்து உரிமையை நசுக்குகின்ற வகையில் அடக்கு முறையைக் கையாள்வதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். பொழிலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x