Published : 28 Oct 2015 09:05 PM
Last Updated : 28 Oct 2015 09:05 PM

துவரம் பருப்பு விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை: கடைகளில் கிலோ ரூ.145-க்கு விற்பனை- அமைச்சர் நடத்திய கூட்டத்தில் வணிகர்கள் ஒப்புதல்

தமிழகத்தில் துவரம் பருப்பு விலையை குறைக்க வணிகர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இறக்குமதி துவரம் பருப்பு கடைகளில் கிலோ ரூ.145-க்கு விற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.220 வரை விற்கப்பட்டது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. வெளிநாடுகளில் இருந்து முழு துவரையை இறக்குமதி செய்து, பருப்பாக மாற்றி குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசு இறக்குமதி செய்த முழு துவரையில், 500 மெட்ரிக் டன் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூட்டுறவு விற்பனை அங்காடிகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் கிலோ ரூ.110 என்ற விலையில் துவரம் பருப்பு விற்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு வழங்கிய முழு துவரையை பருப்பாக மாற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வெளி மார்க் கெட்டில் பருப்பு விலையை கட்டுப் படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற் கொண்டது. இதுதொடர்பாக பருப்பு வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை சேப் பாக்கம் எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், உணவுத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கா.பாலச்சந்திரன், உணவுப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங் களில் பருவமழை பொய்த்ததால், சாகுபடி பரப்பும் உற்பத்தியும் குறைந்தது. இதனால், பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110, அரை கிலோ ரூ.55 என்ற விலையில் நுகர்பொருள் வாணிபக்கழக பல்பொருள் அங்காடிகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் விற்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, 91 அங்காடிகளுக்கும் துவரம் பருப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் காரணமாக தமிழகத்தில் துவரை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. மேலும் துவரை சாகுபடிக்கான இயக்கம் ஒன்று செயல்படுத்தப்படும். சாகுபடியை அதிகரிக்க பல்வேறு உத்திகள் கடைபிடிக்கப்படும். தமிழகம் பருப்பு சாகுபடியில் விரைவில் தன்னிறைவு அடையும். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பருப்பு மொத்த வணிகர்களுக்கு அனைத்து பருப்புகளுக்குமான மொத்த அளவில் மாநகராட்சிகளில் 2,500 குவிண்டால், சில்லறை வணிகர்களுக்கு 62.5 குவிண்டால், இதர பகுதிகளில் 1,250 குவிண்டால் மற்றும் 50 குவிண்டால் என்ற அளவில் இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் மட்டும் இருப்பு வைத்து, விலை உயர்வின்றி விநியோ கிக்க அரசு எடுக்கும் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

ரூ.145-க்கு விற்கலாம்

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு பருப்பு வணிகர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பருப்பு வகைகளை குறைந்த விலையில் விற்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.133 முதல் ரூ.135 வரை மில் விலைக்கு விற்கப்படும். இதனால், இதுவரை கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட துவரம் பருப்பு, இனி சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.145-க்கு மிகாமல் விற்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x