Published : 22 Oct 2020 06:59 AM
Last Updated : 22 Oct 2020 06:59 AM

இதயத்தை கத்தி துளைத்த நிலையில் அறுவை சிகிச்சையால் இளைஞரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்: சுகாதாரத் துறை செயலர் பாராட்டு

கத்தியால் குத்தியதில் இதயம் பாதிக்கப்பட்ட இளைஞரின் உயிரை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கரோனா காலத்தில் விரைவாக செயல்பட்ட மருத்துவக் குழுவினரை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பாராட்டிஉள்ளார்.

மணிப்பூர் மாநில இளைஞர் சாமுவேல் (20). முன்னாள் ராணுவ வீரரின் மகனான இவர்,பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ளார். கடந்த 17-ம்தேதி நள்ளிரவில் பெசன்ட் நகரில் நண்பர்களுடன் மோதல்ஏற்பட்டுள்ளது. இதில் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சாமுவேல் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர், சிறிது நேரத்தில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில், நெஞ்சுப்பகுதியில் குத்திய கத்தி இதயத்தின் ஒருபுறம் சென்று மறுபுறம் வெளியே வந்திருப்பதும், அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும் ரத்தம் உறைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அந்த இளைஞருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் மருத்துவர் பி.மாரியப்பன் தலைமையில் மருத்துவர் இளவரசன், மயக்கமருத்துவர் நிரஞ்சன், செவிலியர்கள் கவுசல்யா, ஜமுனா, டெக்னீசியன் செல்வம் குழுவினர் விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இளைஞரின் இதயத்தையும், உயிரையும் காப்பற்றினர்.

நலம் விசாரிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத் துறைச் செயலாளர் மருத்துவமனைக்கு வந்து இந்த கரோனா தொற்று காலத்திலும் விரைவாக செயல்பட்டு இளைஞரின் உயிரை காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டினார். சிகிச்சையில் இருந்த இளைஞரிடம் உடல்நலம் விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x