Published : 21 Oct 2020 11:18 AM
Last Updated : 21 Oct 2020 11:18 AM

சேலத்தில் இடி, மின்னலுடன் 87 மிமீ மழை பதிவு: குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கிச்சிப்பாளையம் ராஜா பிள்ளை காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம் / தருமபுரி / கிருஷ்ணகிரி

சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. சேலத்தில் 87.3 மிமீ மழை பதிவானது.

சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நேற்று அதிகாலை 6 மணி வரை விடிய விடிய பெய்தது. தொடக்கத்தில் லேசாக பெய்த மழை தொடர்ந்து இடி மற்றும் சூறைக் காற்றுடன கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாக்கடை கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலைகளில் ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

குறிப்பாக சேலம் அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளை யம், பச்சப்பட்டி, அசோக்நகர், நெத்திமேடு, பள்ளப்பட்டி, தாதுபாய்குட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

சேலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:

சேலம் -87.3, ஆணைமடுவு 56, கெங்கவல்லி 52, ஆத்தூர் 50.6, கரியகோவில் 50, வீரகனூர் 38, தம்மம்பட்டி 18 மிமீ மழை பதிவானது.

அரூர் பகுதியில் கனமழை

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு பரவலாக கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில் 47 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

அதேபோல, பாப்பிரெட்டிப் பட்டி பகுதியில் 30 மி.மீட்டர், பாலக்கோட்டில் 7 மி.மீட்டர், பென்னாகரத்தில் 4 மி.மீட்டர், தருமபுரியில் 2.5 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

3 மாடுகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று, கிருஷ்ணகிரி அணை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. மழையின் போது போச்சம்பள்ளி அடுத்த வெங்காபுளியங்கொட்டாய் கிராமத்தைச் முருகேசன் என்பவர் தனக்கு சொந்தமான 3 மாடுகளை வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். அப்போது, மின்சார கம்பி அறுந்து 3 மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 மாடுகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழை அளவு வருமாறு: பெனுகொண்டாபுரத்தில் அதிகபட்சம் 50.3மிமீ, போச்சம்பள்ளி 35, ஊத்தங்கரை 33.2, கிருஷ்ணகிரி 19, பாரூர் 11.8, நெடுங்கல் 8.8, சூளகிரி 2 மிமீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x