Published : 20 Oct 2020 07:22 AM
Last Updated : 20 Oct 2020 07:22 AM

பம்மலில் மக்களை அச்சுறுத்திய சுவரை இடிக்கும் பணி தொடக்கம்

‘இந்து தமிழ்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக பம்மல், நாகல்கேணியில் மக்களை அச்சுறுத்தி வந்த தொழிற்சாலையின் சுவரை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

பல்லாவரம் அருகே, பம்மல் நகராட்சி நாகல்கேணி - பூம்புகார் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் பகுதியில், தனியார் தொழிற்சாலையை சுற்றி 12 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில், அந்தச் சுவர் சுமார் 100 அடி நீளத்துக்கு மிகவும் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது.

இதுகுறித்து ‘அன்பறம்' அறக்கட்டளை சார்பில் தலைவர் இரா.கந்தவேலு, ‘‘விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில், உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், பருவமழை தொடங்கும் முன்பே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பம்மல் நகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். இது தொடர்பாக, ‘இந்து தமிழ்’ நாளிதழில் சிலநாட்களுக்கு முன்பாக படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்கி, பொதுமக்களை அச்சுறுத்தும் அந்த சேதமடைந்த சுவரை விரைந்து இடிக்க தொழிற்சாலை நிர்வாகத்தை நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதனால் நேற்று, அந்த சுற்றுச்சுவரை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ’இந்து தமிழ்’ நாளிதழுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் ‘அன்பறம்' அறக்கட்டளைக்கும் அந்தப்பகுதி பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x