Published : 20 Oct 2020 07:21 AM
Last Updated : 20 Oct 2020 07:21 AM

கோயம்பேடு சந்தையை முழுமையாக திறக்கக் கோரி வியாபாரிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

கோயம்பேடு சந்தையை முழுமையாக திறக்கக் கோரி வியாபாரிகள் தங்களின் கடை உள்ளேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கி உள்ளனர். படம்: ம.பிரபு

சென்னை

கோயம்பேடு சந்தையை முழுமையாக திறக்கக் கோரி, சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போரட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் 200 மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு மட்டுமே வியாபாரம் செய்யஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோயம்பேடு சந்தையை முழுமையாக திறக்க வலியுறுத்தி சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சந்தை வளாகத்தில் நேற்று தொடங்கினர்.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது:

கோயம்பேடு சந்தை, கரோனா தொற்று காரணமாக கடந்த மே 5-ம் தேதி மூடப்பட்டது. பின்னர் திருமழிசையில் காய்கறி சந்தையும், மாதவரத்தில் பழச்சந்தையும் தற்காலிகமாக திறக்கப்பட்டன. அங்கு தலா 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 1,700 சிறுமொத்த காய்கறி வியாபாரிகள், 800 சிறுமொத்த பழ வியாபாரிகள் கடை திறக்க கோயம்பேடு சந்தை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதனால் சிறுமொத்த காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வியாபாரம் இன்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

எனவே, கோயம்பேடு சந்தையை முழுமையாக திறந்து, அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலரிடம் கடந்த 13-ம் தேதி மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x