Published : 13 Oct 2020 03:51 PM
Last Updated : 13 Oct 2020 03:51 PM

கள்ளத் துப்பாக்கி மலையாகிப்போன திண்டுக்கல் சிறுமலை: போலீஸாரின் எச்சரிக்கையால் பொது இடங்களில் வீசப்படும் நாட்டுத்துப்பாக்கிகள் 

திண்டுக்கல் சிறுமலைப் பகுதியில் அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு அதிகரித்ததையடுத்து தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்க போலீஸார் எச்சரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து பொது இடங்களில் நாட்டுத்துப்பாக்கிகளை வீசிவிட்டு செல்வது தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கள்ளத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் சிறுமலை அடிவாரம் பகுதியில் அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கியுடன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒருவர் பிடிபட்டார். அவரை விசாரித்ததில் ரெட்டியபட்டி பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நால்வரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் அனுமதியின்றி அதிகம்பேர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டி.ஐ.ஜி.,முத்துச்சாமி, திண்டுக்கல் எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் அனுமதியின்றி பயன்பாட்டில் உள்ள நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி., வினோத் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடச்செய்தனர். முதற்கட்டமாக

சிறுமலை பகுதி, நத்தம் அருகேயுள்ள கரந்தமலை பகுதி, கொடைக்கானல் கீழ்மலை அடிவாரப்பகுதியில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்கவேண்டும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறை, வருவாய்த்துறை உதவியுடன் போலீஸார் நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறியத்தொடங்கினர்.

இந்நிலையில் சாணார்பட்டி அருகே சிறுமலை அடிவாரம் தவசிமடை ஓடைப்பகுதியில் முதல் கட்டமாக 17 துப்பாக்கிகள் வீசப்பட்டு கிடந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து சில தினங்களில் மேலும் பத்து துப்பாக்கிகள், ஒரு பேரல் தவசிமடை ஓடைப்பகுதியில் வீசப்பட்டுகிடந்தது. அப்பகுதி கிராம நிர்வாக அலுலவலர் புகாரில் சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பொது இடத்தில் கிடந்த நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

கடந்த இருதினங்களாக திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான குழுவினர் சிறுமலை பகுதியில் தண்டோரா மூலம் மலைகிராமங்களில் அறிவிப்பு வெளியிட்டும், மைக் மூலமும் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தாங்களே முன்வந்து ஒப்படைக்கவேண்டும் என எச்சரித்தும் வந்தனர்.

இதையடுத்து நேற்று காலை சிறுமலை மலைப்பகுதியில் உள்ள கடமான்கோம்பை பகுதியில் நேற்று 28 அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பேரல்கள் பொது இடத்தில் வீசப்பட்டு கிடந்ததை கண்டனர். இவற்றை திண்டுக்கல் தாலுகா போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுவரை சிறுமலை அடிவாரம் மற்றும் மலைப்பகுதிகளில் 55 அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நத்தம் அருகேயுள்ள கரந்தமலைபகுதி, சிறுமலை அடிவாரம் வெள்ளோடு பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x