Last Updated : 11 Oct, 2020 03:01 PM

 

Published : 11 Oct 2020 03:01 PM
Last Updated : 11 Oct 2020 03:01 PM

கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் நல வாரியத்தை தமிழக அரசு உடனே அமைக்க வலியுறுத்தல்

கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் நல வாரியத்தை தமிழ்நாடு அரசு உடனே அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் நல உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அதன் ஆலோசகரும், தமழ்நாடு யாதவ மகா சபையின் பொதுச் செயலாளருமான சுப.சிவபெருமாள், 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறியது:

''கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் நலனைக் காக்கும் வகையில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக அரசு கருத்துக் கேட்புக்குப் பிறகு, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவப் பணிகள் இயக்ககமும் நல வாரியம் அமைக்கக் கோரி 2017-ம் ஆண்டில் பரிந்துரை செய்தது. ஆனால், அதன் பிறகும் அரசு நல வாரியம் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை நாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமந்தோறும் இருந்து வந்த மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், காலப்போக்கில் அரசின் கவனமின்மை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் மறைந்துவிட்டதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் அவதிக்குள்ளாவதைக் களையும் வகையில் தற்போதுள்ள புறம்போக்கு இடங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்றியமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனப் பகுதிக்குள் கால்நடைகளை குறிப்பிட்ட எல்லை வரை மேய்ச்சலுக்கு அனுமதிக்கவும், இதற்காக குறைந்தபட்ச வரியை நிர்ணயம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிடில் நீதிமன்றத்தை நாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது போலீஸாரால் பல்வேறு இடையூறுகள் நேரிடுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் ஆகியோருக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

அரசின் நலத் திட்டங்களைப் பெறும் வகையில், கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போருக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விபத்து, நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்நடைகள் உயிரிழந்தால் பெரும் இழப்பு நேரிடுகிறது. இதுபோன்ற இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கால்நடைகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போருக்கான இலவசமாக காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஏற்படுத்திச் செயல்படுத்த வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஜெயச்சந்திரன், சட்ட ஆலோசகர் சத்யம் சரவணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x