Published : 10 Oct 2020 06:21 PM
Last Updated : 10 Oct 2020 06:21 PM

நீதிமன்ற விசாரணை வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை: அரசு வழக்கறிஞர்களுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை

சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்றுத் தருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.

சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் இன்று (10.10.2020) காலை காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் டி.கோபிநாத், துணை இயக்குநர், அரசுத் தரப்பு குற்றவியல் வழக்கு தொடர்புத் துறை, சென்னை, பன்னீர்செல்வம், துணை இயக்குநர், காஞ்சிபுரம், கௌரி அசோகன், சென்னை அரசு வழக்கறிஞர் மற்றும் எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய குற்றவியல் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், விரைவு நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வழக்குகள் தாமதமாவதற்கான காரணங்கள் ஆராயப்பட்டும், சாட்சிகள் விசாரணை மேம்படுத்துதல், பிடியாணைகளை நிறைவேற்றுதல், அரசு சாட்சிகள் நீதிமன்றத்தில் விரைந்து விசாரணை செய்தல், பிணை உத்தரவு ரத்து செய்ய முறையாகப் பதிவு செய்தல் மற்றும் இதர நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்தல், வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்றுத் தருதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வழக்குகளைக் கையாளும் காவல் விசாரணை அதிகாரிகளுக்கு விரைந்து முடிப்பதற்கான பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் ஆணையர் அமல்ராஜ், கூடுதல் ஆணையர் தெற்கு தினகரன், வடக்கு கூடுதல் ஆணையர் அருண், 4 மண்டல இணை ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x