Published : 09 Oct 2020 05:49 PM
Last Updated : 09 Oct 2020 05:49 PM

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், இந்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்திற்கு அளித்திருந்தது.

இதையடுத்து, சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணர் குழு அமைத்து இழப்பீடு தொடர்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று (அக். 09) நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், கனிம வளங்கள் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தாலும், அதனை அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் சுரண்டப்பட்ட கனிம வளங்களில் இதுவரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்யப்பட்டுள்ள 70 வழக்குகளின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலருடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.

இதையடுத்து, கனிமவளக் கொள்ளைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கனிமவளக் கொள்ளைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x