Published : 09 Oct 2020 03:27 PM
Last Updated : 09 Oct 2020 03:27 PM

நிலம் வாங்கித் தருவதாக பணமோசடி: நடிகர் சூரி புகாரின் பேரில் தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.69 கோடி பணத்தை வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் சூரி 'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடித்தார். இத்திரைப்படத்தில் 50 பரோட்டாக்களைப் பந்தயம் போட்டு சாப்பிடும் நகைச்சுவைக் காட்சி மூலம் பரோட்டா சூரியாக பிரபலமானார். பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்த சூரி தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக சூரி தாக்கல் செய்த மனுவில், ''2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் 'வீரதீர சூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அதன் இணை தயாரிப்பாளராக ரமேஷ் என்பவர் இருந்தார். அதில் அவரது மகன் விஷ்ணு விஷால் நடித்தார். ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டது.

இந்நிலையில் திடீரென படத் தயாரிப்பு நிறுவனப் பெயரை மாற்றி படத்தின் பெயரையும் மாற்றி ஷூட்டிங் நடந்தது. அதில் தனக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை. இந்நிலையில் சென்னையில் இடம் வாங்க நான் விருப்பப்பட்டதை அறிந்த தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், இணை தயாரிப்பாளர் ரமேஷ் இருவரும் புறநகரான சிறுசேரியில் ஒரு இடத்தைக் காட்டினர். அந்த இடத்தை நான் வாங்க முடிவு செய்தேன். நான் நடித்து அவர்கள் தயாரித்த படத்தில் வரவேண்டிய தொகையை அட்வான்ஸாக கழித்தனர்.

பின்னர் இடத்தை வாங்க 2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் சிறுசேரியில் உள்ள இடத்தைப் பதிவு செய்ததற்கு பல தவணையாக ரூ.3,15,00,000/- வரை கொடுத்தேன். அதன்பிறகு விசாரித்ததில் அந்த இடத்திற்குச் சரியான பாதை இல்லை. அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதால் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பணத்தை திருப்பித் தருவதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். அதன் படி ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து மீதமுள்ள தொகை ரூ. 2,69,92,500/- கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்துக் கேட்டபோது இருவரும் என்னை மிரட்டினர். ரமேஷ் மற்றும் V.R.அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அடையாறு காவல் நிலையத்தில் ஆகஸ்டு 31 அன்று நான் புகார் அளித்தேன். அதற்கு சிஎஸ் ஆர் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

மீண்டும் செப்.4 அன்று துணை ஆணையரைச் சந்தித்து புகார் குறித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் அதே நாளில் காவல் ஆணையரைச் சந்தித்துப் புகார் அளித்தேன். நடவடிக்கை இல்லை என்பதால் அவர்கள் மீது ஐபிசி 406, 420,465,468,471,506(2) 120-பி பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்'' என்று சூரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அடையாறு காவல் நிலையத்தில் ரமேஷ் மற்றும் அன்புவேல் ராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் குறித்த புகார் என்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

சூரியின் புகாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவரது புகார் தனக்கு வருத்தமளிப்பதாகவும் விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அவரின் தந்தை ரமேஷ் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x