Last Updated : 09 Oct, 2020 02:37 PM

 

Published : 09 Oct 2020 02:37 PM
Last Updated : 09 Oct 2020 02:37 PM

மாநில உரிமையைப் பாதுகாக்க சிறை செல்லவும் தயார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

மாநில உரிமையைப் பாதுகாக்க சிறை செல்லவும் தயார். இப்போதும் 2 வேட்டி, 2 சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு கைதுக்குத் தயாராக உள்ளேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக மனு தந்துள்ளது.

இந்நிலையில், புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (அக். 09) கூறியதாவது:

"மாநில அரசின் அதிகாரங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. பட்ஜெட்டை 4 மாதங்கள் காலதாமதம் செய்தனர். ஆண்டுக்கு ரூ.3,000 கோடி நிதி அளிக்க வேண்டும். ஆனால், ரூ.1,700 கோடிதான் நிதி அளிக்கின்றனர்.

இருமொழிக்கொள்கை என நாம் கூறினால், மும்மொழிக் கொள்கை எனக் கூறுகின்றனர். நீட் வேண்டாம் என்றால் திணிக்கின்றனர். மாநிலப் பட்டியலில் இருந்து வேளாண்மையைப் பறித்து சட்டம் இயற்றியுள்ளனர். புதுச்சேரி மாநில அரசின் நில உரிமையைப் பறித்துவிட்டனர். நிதியும் தருவதில்லை. ரேஷனில் அரிசி போட முடியவில்லை. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. தீபாவளிக்கு ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசத் துணி தர மறுப்புத் தெரிவித்து பணம் தரக் கூறிவிட்டனர்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் தமிழகத்தோடு புதுவையை இணைக்க பாஜக திட்டமிடுகிறதோ? எனக் கூறினேன். புதுச்சேரி அரசிடம் இருந்த நிலம், நிதி, மக்கள் திட்டங்களுக்கான அதிகாரங்களைப் பறித்து தமிழகத்தோடு இணைப்பது என்பதுதான் மத்திய பாஜக அரசின் சதித் திட்டம்.

இதைக் கூறியதற்காக எனக்கு எதிராக புதுச்சேரி பாஜகவினர் ஊர்வலம் நடத்துகின்றனர். தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தன்னை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்வது, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, சிபிஐயை ஏவுவது என பாஜக திட்டமிட்டுச் செயல்படுகிறது.

நான் இந்திரா காந்திக்காக ஏற்கெனவே சிறைக்குச் சென்றவன்தான். இப்போதும் 2 வேட்டி, 2 சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு சிறை செல்லத் தயாராக உள்ளேன். மக்கள் உரிமைக்காகவும், மாநில உரிமைகளை, பாரம்பரியத்தைப் பாதுகாக்க சிறைக்குச் செல்லத் தயார்தான்.

புதுவையில் உள்ள எதிர்க்கட்சிகள் தூங்கிக்கொண்டிருக்கிறன. ஒருபுறம் மாநில உரிமை பறிக்கப்படுகிறது. மறுபுறம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் நலத்திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x