Published : 08 Oct 2020 06:07 PM
Last Updated : 08 Oct 2020 06:07 PM

முகக்கவசம் அணியாதவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்?- ராமதாஸ் கேள்வி

முகக்கவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கரோனா விதிகளை மீறுபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கரோனா குறித்த அச்சம் பொதுமக்களுக்குக் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.

அவரது பேட்டியில், “எங்களுக்குச் சவாலாக இருக்கும் விஷயம் என்னவென்றால் சென்னை மக்கள் முகக்கவசம் அணிவதில் சமீபகாலமாக அலட்சியமாக இருந்து வருகிறார்கள். பத்திரிகைகள், பிரச்சாரம் காரணமாக ஆரம்பத்தில் சரியாக முகக்கவசம் அணிந்த சென்னை மக்கள் சமீப மாதங்களில் மிக அலட்சியமாக இருப்பதைக் காண முடிகிறது. பார்த்துக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை எனும் போக்கு மக்களிடம் அதிகரிக்கிறது. இது மிக மிக ஆபத்தான விஷயம்.

நாம் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றுவிட்டு வந்தால் நம் வீட்டிலோ, அண்டை வீட்டிலோ இருக்கும் வயதானவர்கள், நீண்ட நாள் நோய் பாதிப்புள்ளவர்களைப் பாதிக்கும். கிட்னி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருக்கலாம். நமது செயல் அவர்களைப் பாதிக்கலாம். சில நேரம் சிலரது உயிரிழப்புக்கும் நாம் காரணமாகிவிடக்கூடும்.

முகக்கவசம் மிக முக்கியமான ஒன்று என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் என அபராதம் விதிக்கப்பட்டு 2.25 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளோம். அபராதம் விதித்து வசூலிக்கும் நோக்கமில்லை. ஆனால், ஒரு நபரால் பல நபர்களுக்குப் பரவக்கூடாது என்பதே நோக்கம்.

இனியும் நடவடிக்கைகளைக் கடுமையாக்க உள்ளோம். காவல்துறை, மருத்துவத் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம். அக்டோபர், நவம்பர் மாதங்கள் கடினமான காலகட்டம். அதனால் நடவடிக்கை கடுமையாக இருந்து கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே தடுக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இதை ஆமோதிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“முகக்கவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாகப் பாடம் புகட்டப்பட வேண்டும்.

கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்வரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?

சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. 90% மக்கள் முக்கவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? விதிகளை மதிக்காமல் கரோனாவைப் பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது”. #Unite2FightCorona

— Dr S RAMADOSS (@drramadoss) October 8, 2020

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x