Published : 07 Oct 2020 07:44 PM
Last Updated : 07 Oct 2020 07:44 PM

ஸ்டாலின் தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி அமையும்: கனிமொழி பேச்சு

கனிமொழி: கோப்புப்படம்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி அமையும் என, அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில், இன்று (அக். 7) ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கனிமொழி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கனிமொழி பேசியதாவது:

"சுய உதவிக் குழுக்கள் எல்லாம் இயங்காத ஒரு சூழலை இப்போது நாம் பார்க்கிறோம். இங்கே இருக்கக்கூடிய ஆட்சி பெண்களுக்குத் தேவையான அடிப்படைப் பாதுகாப்பே இல்லாத ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறது. இங்க மட்டுமல்ல மத்தியிலே ஆளக்கூடிய பாஜக ஆட்சி தான் ஆளக்கூடிய மாநிலங்களில் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான ஒரு ஆட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் - குழந்தைகள்தான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மிக அதிக அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலை நாம் பார்க்கிறோம்.

அதிமுக விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரும் சட்டங்களை ஆதரிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள், இப்போது எல்லாக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வர இருக்கிறார்கள். நம்ம கிராமத்துப் பிள்ளைகள் எப்படிப் படிக்கும்? நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சிக்குச் செல்ல முடியாத பிள்ளைகள் எப்படிக் கல்லூரிக்குள் நுழைய முடியும்?

இந்த நுழைவுத் தேர்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இங்கிருக்கும் ஐஐடியை எடுத்துக்கொள்ளுங்கள். நுழைவுத் தேர்வைத் தாண்டி ஆண்கள் மற்றும் உயர் வகுப்பினர்தான் உள்ளே நுழைய முடிகிறது. பக்கத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

நுழைவுத் தேர்வு என்பது வாய்ப்புகளை வடிகட்டி ஒரு தரப்பினருக்கு வாரிக் கொடுப்பதாகத்தான் இருக்கிறது. இதிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஆக, பெண்களுக்கு எதிரான திட்டங்கள், செயல்பாடுகள் இப்போது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர் ஆளுங்கட்சியினர், ஆளும் கட்சியினருக்கு வேண்டியவர்கள் என்றால்கூட அவர்கள் பாதுகாக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இந்தக் கரோனா காலகட்டத்தில் அவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது. தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வர வேண்டும் இந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

விவசாயிகளின் தோழன் என்று ஒருவர் இருக்கிறார். விவசாயிகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல், பெண்கள் போற்றும் தலைவர் என்று போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்கிறார்கள்.

அவர்கள் முகங்களை எல்லாம் மறுபடியும் பார்க்க வேண்டாம் என்று மக்கள் நினைக்கக்கூடிய ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். மறுபடியும் தலைவர் கருணாநிதியின் ஆட்சி, ஸ்டாலினை முன்னிறுத்தும் ஆட்சி அமைய வேண்டும்.

மகளிரணிப் பேரணியில், ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முதல் தகவல் அறிக்கை கூட பதிய முடியாத அவலம் உத்தரப் பிரதேசத்தில் நடந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு ஆட்சியை ஸ்டாலின் உருவாக்கித் தருவார் என்ற உறுதியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு கனிமொழி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x